கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்


கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 21 Sep 2021 4:13 PM GMT (Updated: 21 Sep 2021 4:13 PM GMT)

கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது சித்தூர் நத்தம் கிராமம். இங்கு தனியாருக்கு சொந்தமான மின் ஊற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இங்கு இருந்து வெளியேற்றப்படும் நச்சு கழிவுகளால் சுற்றுபுறங்களில் உள்ள நீர்நிலைகள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றன. இதனால் கிராம மக்கள் சுவாச கோளாறு, கிட்னி பாதிப்பு உள்பட பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மேற்கண்ட தொழிற்சாலையை கண்டித்து அதன் நுழைவு வாயில் முன்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீதர், லட்சுமி நாராயணன் ஆகியோர் தலைமையில் நேற்று கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது தொழிற்சாலை ஊழியர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்த மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகள், தொழிற்சாலையை சுற்றி உள்ள நீர் நிலைகள் மற்றும் விவசாய நிலங்களை ஆய்வு செய்தனர். அப்போது வெவ்வேறு நீர்நிலைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட 3 தண்ணீர் மாதிரிகளை அவர்கள் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த ஆய்வுக்கு பிறகு முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாசு கட்டுபாட்டு அதிகாரிகள் அப்போது தெரிவித்தனர். இதனை அடுத்து கிராம மக்கள் தங்களது 3 மணி நேர முற்றுகை போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Next Story