திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு 18 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு 18 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
x
தினத்தந்தி 21 Sept 2021 9:57 PM IST (Updated: 21 Sept 2021 9:57 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு 18 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளன.

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு 18 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளன. 
வேட்பு மனு தாக்கல்
திண்டுக்கல் மாவட்டத்தில் 22 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4 ஊராட்சி தலைவர்கள், 2 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் என மொத்தம் 28 பதவிகள் காலியாக உள்ளன. இந்த 28 உள்ளாட்சி பதவிகளுக்கும் அடுத்த மாதம் (அக்டோபர்) 9&ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் 40 ஆயிரம் பேர் வாக்களிக்க உள்ளனர். 
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15&ந்தேதி தொடங்கியது. இதில் நேற்றைய தினம் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 6 பேரும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதன்மூலம் நேற்று ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 39 பேரும், ஊராட்சி தலைவர் பதவிக்கு 8 பேரும், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 9 பேரும் என இதுவரை மொத்தம் 56 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 
இன்று கடைசி
இதற்கிடையே வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (புதன்கிழமை) கடைசி நாள் ஆகும். எனவே இறுதி நாளில் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகின்றன. 
இதற்காக மாவட்டம் முழுவதும் 75 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதற்கிடையே உள்ளாட்சி இடைத்தேர்தலை அமைதியாக நடத்தும் வகையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. எனவே பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறியும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். 
பதற்றமான வாக்குச்சாவடிகள் 
இதையொட்டி கடந்த 3 உள்ளாட்சி தேர்தல்களின் போது வாக்குச்சாவடிகளில் ஏற்பட்ட பிரச்சினைகள், வாக்குச்சாவடி அமைந்த பகுதிகளில் உருவான மோதல்களை அடிப்படையாக கொண்டு போலீசார் ஆராய்ந்தனர். அதன்மூலம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 18 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளன. 
இதையடுத்து பதற்றமான 18 வாக்குச்சாவடிகளின் வரைபடம் தயாரிக்கப்பட்டது. மேலும் வாக்குப்பதிவு நாளில் 18 வாக்குச்சாவடிகளிலும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட உள்ளனர். அதில் துப்பாக்கி ஏந்திய போலீசாரை நியமிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறது. அதோடு பதற்றமான பகுதிகளில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. 

Next Story