நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவியை மலைவாழ் சமூகத்தினருக்கு ஒதுக்கக்கோரி முற்றுகை


நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவியை மலைவாழ் சமூகத்தினருக்கு ஒதுக்கக்கோரி முற்றுகை
x
தினத்தந்தி 21 Sept 2021 10:50 PM IST (Updated: 21 Sept 2021 10:50 PM IST)
t-max-icont-min-icon

நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவியை பழங்குடியினருக்கு ஒதுக்கக்கோரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை மலைவாழ் மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

வாணியம்பாடி

நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவியை பழங்குடியினருக்கு ஒதுக்கக்கோரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை மலைவாழ் மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மலைகிராமம்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள மாதனூர் ஒன்றியத்துக்குட்பட்ட நாயக்கனேரி ஊராட்சி மலை கிராமமாகும். இந்த ஊராட்சியில் 3, 440 வாக்காளர்கள் உள்ளனர் இந்த ஊராட்சி 9-வார்டுகளை உள்ளடக்கியதாகும். இந்த கிராமத்தில் மலைவாழ் சமூகத்தினர் அதிக அளவில் வசிக்கின்றனர். வன்னியர், நாயுடு, இருளர், மலையாளி சமூகத்தை சேர்ந்தவர்களும் இங்கு உள்ளனர். இவர்களை தவிர பட்டியலினத்தை சேர்ந்த 5 பேர் வசிக்கின்றனர். ஒவ்வொரு தேர்தலிலும் இந்த ஊராட்சி தலைவர் பதவி மலைவாழ் மக்கள் சமூகமான பழங்குயினருக்கு ஒதுக்கப்படும். ஆனால் இந்தமுறை நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவி பட்டியலினத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்திருந்த நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் பதவி மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் நேற்றுவரை யாரும் மனுதாக்கல் செய்யவில்லை.
நாயக்கனேரி ஊராட்சி தேர்தல் நடத்தும் அலுவலராக ஜோன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரிடம் விசாரித்தபோது ஒரு மனு கூட இதுவரையிலும் யாரும் பெற்று செல்லவில்லை என்றார்.
 
முற்றுகை

பட்டியலினத்தை சேர்ந்தவருக்கு ஊராட்சி தலைவர் பதவி ஒதுக்கப்பட்டதை கண்டித்தும் பழங்குடியினருக்கு அந்த பதவியை ஒதுக்கக்கோரியும் வாணியம்பாடியில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த 100&க்கும் மேற்பட்ட மலைகிராம மக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள் வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியிடம் மனு அளித்தனர்.

பின்னர், நிருபர்களிடம் பொதுமக்கள் தரப்பில் மாதனூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ஜோதி ராமலிங்க ராஜா கூறியதாவது:& நடக்கக்கூடிய ஊரக உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கவும், விரைவில் அதிகாரிகள் தலையிட்டு அதிகமான மலை கிராம மக்கள் வசிக்கக்கூடிய இந்த பகுதியில் ஊராட்சி தலைவர் பதவியை பழங்குடியினருக்கு ஒதுக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளோம், அதை உடனடியாக முயற்சி செய்து மாற்றாவிட்டால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும், சம்மந்தமே இல்லாத நபரை வாக்காளர் பட்டியலில் சேர்க்ககூடாது எனவும் வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

பரிந்துரை

இது குறித்து, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி கூறியதாவது:-

மலைபகுதியில் உள்ள ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்த இந்துமதி என்ற பெண் காமனூர்தட்டு பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவரை கலப்பு திருமணம் செய்துகொண்டு அவருடன் வசித்து வருகிறார். அவர் சமீபத்தில் நடைபெற்ற வாக்காளர் முகாமில் தனது பெயரை சேர்த்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார், அதிகாரிகள் தற்போது அதனை பரிசீலனை செய்து வருகின்றனர். மலைவாழ் மக்களுக்கு நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவியை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை மீது மாநில தேர்தல் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்க முடியும். பொதுமக்கள் கோரிக்கை குறித்து கலெக்டர் மூலம் பரிந்துரை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story