தொடர்மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு


தொடர்மழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 21 Sept 2021 10:56 PM IST (Updated: 21 Sept 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

தொடர்மழை காரணமாக வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதியில் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வாணியம்பாடி

தொடர்மழை காரணமாக வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதியில் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகிலுள்ள தமிழக, ஆந்திர எல்லைப் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கனமழையால் தற்போது பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திம்மாம்பேட்டை, ஆவாரம்குப்பம், அம்பல்லூர், கொடையாஞ்சி, வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் செல்லக்கூடிய பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் வாணியம்பாடி நகர பகுதியில் பெய்த மழையின் காரணமாக பல இடங்களில் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது. கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டது. ஆற்றுமேடு என்ற பகுதியில் உள்ள சிறு பாலத்தின் ஒரு பகுதி உடைந்து சரிந்துவிட்டது. இதேபோல் மலங்கு ரோடு பகுதியில் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, சாலை முழுவதும் மழைநீர் தேங்கியது. இதனை அறிந்த வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார் நேரில் சென்று பொக்லைன் எந்திரம் மூலம் அடைப்புகளை சீரமைத்து தண்ணீர் செல்ல நடவடிக்கை மேற்கொண்டார்.

ஆம்பூர்

அதேபோன்று ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பச்சகுப்பம் பகுதியிலிருந்து குடியாத்தம் மற்றும் நரியம்பட்டு பகுதிகளை இணைக்கும் தரைப்பாலத்தில் வெள்ளம் ஏற்பட்டு, தரை பாலத்தின் மீது தண்ணீர் ஓடுகிறது. இதனால் வாகனங்கள் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலத்தின் இருபுறமும் உமராபாத் போலீசார் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story