மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் குறைவான கூலி வழங்குவதாக கூறி தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்


மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு  திட்டத்தில் குறைவான கூலி வழங்குவதாக கூறி தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 21 Sep 2021 5:33 PM GMT (Updated: 21 Sep 2021 5:33 PM GMT)

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் குறைவான கூலி வழங்குவதாக கூறி தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வளவனூர், 


விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் மழவராயனூர் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் மழவராயனூர், ஆழாங்கால் வாய்க்கால்களை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணியில் அந்த ஊராட்சியை சேர்ந்த 200&க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு கூலித்தொகை குறைத்து வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த தொழிலாளர்கள், சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

சாலை மறியல்

இந்நிலையில் ஆத்திரமடைந்த கூலித்தொழிலாளர்கள் நேற்று காலை 11.15 மணியளவில் வேலை உறுதியளிப்பு திட்டப்பணியை புறக்கணித்து திடீரென ஆழாங்கால் மெயின்ரோட்டுக்கு திரண்டு வந்து அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது அரசு வழங்கும் கூலித்தொகையை குறைக்காமல் முழுமையாக வழங்கக்கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர். இந்த மறியல் காரணமாக விழுப்புரம்& பண்ருட்டி சாலையில் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி, இன்ஸ்பெக்டர்கள் தீபா, ஜெய்சங்கர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட கூலித்தொழிலாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

குற்றச்சாட்டு

அப்போது கூலித்தொழிலாளர்கள் கூறுகையில், நூறு நாள் வேலை திட்டத்தில் எங்களுக்கு நியாயமாக வழங்க வேண்டிய ரூ.270 கூலித்தொகைக்கு பதிலாக ரூ.120&ஐ தான் வழங்குகின்றனர்.

 இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டால் முறையான பதில் தெரிவிப்பதில்லை. மேலும் கொரோனா காலத்தில் நூறு நாள் வேலை நடக்காத நிலையில் வேலை நடந்ததாகவும், கூலித்தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கியதாக கூறி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.


இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட கூலித்தொழிலாளர்கள், காலை 11.30 மணியளவில் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.



Next Story