வீடுகளில் கொள்ளையடித்த 4 பேர் கைது


வீடுகளில் கொள்ளையடித்த 4 பேர் கைது
x
தினத்தந்தி 22 Sept 2021 2:02 AM IST (Updated: 22 Sept 2021 2:02 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் பகுதியில் வீடுகளில் கொள்ளையடித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தங்கம், வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கம்மாபுரம், 

விருத்தாசலம் அருகே உள்ள மேற்கிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவரது வீட்டில் கடந்த 1.6.2021 அன்று 9 கிராம் தங்கம், ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச்சென்றனர். இதேபோல் முதனை கிராமத்தை சேர்ந்த கதிரேசன் வீட்டில் 13.7.2021 அன்று டி.வி. மற்றும் கொலுசு, தெற்கிருப்பு கிராமத்தை சேர்ந்த சக்திவேல் வீட்டில் கடந்த 21.7.2021 அன்று 88 கிராம் தங்கம், கோட்டேரி கிராமத்தை சேர்ந்த பூராசாமி வீட்டில் கடந்த 1 ந் தேதி 3 பவுன் நகை ஆகியவை கொள்ளை போனது. தொடர் கொள்ளையால் கிராம மக்கள் பீதி அடைந்தனர். இந்த கொள்ளை கும்பலை பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 

4 பேர் கைது 

இந்த கொள்ளை வழக்குகள் சம்பந்தமாக 4 பேரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் ஊ.மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். விசாரணையில், விருத்தாசலம் கஸ்பா தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் ரகு(34), விருத்தாசலம் செல்வராஜ் நகரை சேர்ந்த காசிராஜன் மகன் பரமசிவம்(44), விருத்தாசலம் சக்தி நகரை சேர்ந்த ராஜசெல்வம்(49), தர்மநல்லூரை சேர்ந்த அன்பரசன்(45) ஆகியோர் வீடுகளில் கொள்ளையடித்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 77 கிராம் தங்கம், 360 கிராம் வெள்ளி, டி.வி. ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. 


Next Story