நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 1,399 பேர் வேட்புமனு தாக்கல்
ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி நெல்லை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 1,399 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற 6, 9-ந் தேதிகளில் நடைபெறுகிறது. மாவட்டத்தில் 204 பஞ்சாயத்து தலைவர்கள், 1,731 பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள், 9 யூனியன்களில் 122 யூனியன் வார்டு உறுப்பினர்கள், 12 மாவட்ட பஞ்சாயத்து குழு உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15&ந் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (புதன்கிழமை) கடைசி நாள் ஆகும்.
கூட்டம் அலைமோதியது/ இதையொட்டி கடந்த 2 நாட்களாக வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றது. அந்தந்த பஞ்சாயத்து அலுவலகங்களில் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், பஞ்சாயத்து தலைவர், யூனியன், மாவட்ட பஞ்சாயத்து குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு அந்தந்த யூனியன் அலுவலகங்களிலும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகிறார்கள்.
நேற்றும் ஒன்றிய அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள் திரண்டனர். இதனால் யூனியன் அலுவலக பகுதியில் திருவிழா கூட்டம் போல் மக்கள் கூட்டம் அலைமோதியது. வேட்பாளர்கள் மற்றும் அவர்களுடன் 2 பேரை மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய அலுவலகத்துக்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர். வேட்புமனு தாக்கல் செய்து விட்டு வெளியே வந்த வேட்பாளர்களுக்கு ஆதரவாளர்கள் மாலைகள் அணிவித்து, பட்டாசுகள் வெடித்து ஆரவாரம் செய்தனர். ஒருசில வேட்பாளர்கள் மனுக்களை தாக்கல் செய்வதற்கு முன்பாக அவரவர் வழிபாட்டு தலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தனர்.
நேற்று முன்தினம் வரை மொத்தம் 2,996 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 1,399 பேர் மனு தாக்கல் செய்து உள்ளனர். மாவட்ட பஞ்சாயத்து வார்டுகளுக்கு நேற்று 15 பேர், ஒன்றிய வார்டுகளுக்கு 135 பேர், பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 193 பேர், பஞ்சாயத்து வார்டுகளுக்கு 1,056 பேர் என 1,399 பேர் மனு தாக்கல் செய்தனர். இவர்களுடன் சேர்த்து இதுவரை மொத்தம் 4,395 பேர் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
Related Tags :
Next Story