கட்டாய மதமாற்றத்தை தடுக்க சட்டம் இயற்றுவது குறித்து பரிசீலனை


கட்டாய மதமாற்றத்தை தடுக்க சட்டம் இயற்றுவது குறித்து பரிசீலனை
x
தினத்தந்தி 22 Sept 2021 2:54 AM IST (Updated: 22 Sept 2021 2:54 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் இயற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று சட்டசபையில் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கூறியுள்ளார்.

பெங்களூரு: கர்நாடகத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் இயற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று சட்டசபையில் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கூறியுள்ளார்.

கட்டாய மதமாற்றம்

கர்நாடக சட்டசபையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில் பா.ஜனதா உறுப்பினர் கூளிகட்டி சேகர் எழுந்து, மதமாற்றம் குறித்து கேள்வி எழுப்பினார். அவர் பேசுகையில், “எனது தொகுதியில் சுமார் 20 ஆயிரம் பேர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டனர். அதில் எனது தாயாரும் ஒருவர். அவர் எங்கள் வீட்டில் இருந்து சாமி படங்களை அகற்றிவிட்டார். இதுபற்றி நான் கேட்டால், செத்துவிடுவதாக கூறுகிறார். மத மாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார்.

இதற்கு பதிலளித்த போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா, “கர்நாடகத்தில் மதமாற்றம் நடைபெறுவதாக உறுப்பினர் கூறினார். ஒருவர் தனது சுய விருப்பத்தின் பேரில் மதம் மாறினால் அதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் ஆசைகளை காட்டி அப்பாவி மக்களை மதம் மாற்றுவதாக புகார் கூறப்பட்டுள்ளது. இது கட்டாய மதமாற்றம் ஆகும். கட்டாய மதமாற்றம் செய்யதால், அத்தகையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து சட்டம் இயற்றுவது குறித்து பரிசீலனை செய்யப்படும்.

அமைதிக்கு பங்கம்

மத பிரசாரங்களை மேற்கொள்ள தடை இல்லை. ஆனால் மத பிரசாரத்தை தவறாக பயன்படுத்தி மதம் மாற்றுவது சரியல்ல. இத்தகைய மத மாற்றங்கள் அமைதிக்கு பங்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. இதை தடுக்க வேண்டியது அவசியம்“ என்றார்.

முன்னதாக பேசிய சபாநாயகர் காகேரி, “கர்நாடகத்தில் மத மாற்றங்கள் நடைபெறுவதை தடுக்க சட்டம் கொண்டு வருவது நல்லது. மற்ற மாநிலங்களில் இத்தகைய மதமாற்ற தடை சட்டம் அமலில் உள்ளது“ என்றார்.

Next Story