ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விவசாயிகளுக்கு பொருளீட்டு கடன்


ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விவசாயிகளுக்கு பொருளீட்டு கடன்
x
தினத்தந்தி 22 Sept 2021 3:02 AM IST (Updated: 22 Sept 2021 3:02 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விவசாயிகளுக்கு பொருளீட்டு கடன் வழங்கப்படுகிறது.

நெல்லை:
நெல்லை விற்பனைக்குழு செயலாளர் எழில்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
நெல்லை விற்பனை குழுவின் கட்டுப்பாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி, புதூர், விளாத்திகுளம், கழுகுமலை, கடம்பூர், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், எட்டயபுரம் ஆகிய பகுதிகளில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதேபோல் நெல்லை மாவட்டத்தில் ராமையன்பட்டி, அம்பை, திசையன்விளை, வள்ளியூர் ஆகிய பகுதிகளிலும், தென்காசி மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூர், பாவூர்சத்திரம், சங்கரன்கோவில், ஆலங்குளம், திருவேங்கடம், சிவகிரி ஆகிய பகுதிகளிலும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்கு நெல், பருத்தி, உளுந்து, மிளகாய் வத்தல், நிலக்கடலை, மல்லி உள்ளிட்ட அனைத்து வேளாண் விளைபொருட்களையும் கொண்டு வந்து உலர வைத்து காய வைப்பதற்கு உலர்கள வசதியும், விளைபொருட்களை சேமித்து வைக்க குடோன் வசதியும், குளிர்பதன கிட்டங்கி வசதியும் உள்ளன.

விவசாயிகளின் உடனடி பணத்தேவைக்கும், வரத்து காலத்தில் குறைந்த விலைக்கு விளைபொருட்களை விற்று பாதிப்பு அடையாமல் பாதுகாத்திடவும், அடுத்த சாகுபடிக்கு முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் விவசாயிகளுக்கு பொருளீட்டு கடன் வழங்கப்படுகிறது.

சிறு, குறு விவசாயிகள் தங்களது விளை பொருட்களின் மொத்த மதிப்பில் 75 சதவீதமும், இதர விவசாயிகள் தங்கள் விளைபொருட்களின் மொத்த மதிப்பில் 50 சதவீதமும் அல்லது அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை பொருளீட்டு கடன் பெறலாம். விவசாயிகள் கடன் பெற்ற 15 நாட்கள் வரை வட்டி கிடையாது. அதன்பிறகு 5 சதவீத வட்டி மட்டும் வசூலிக்கப்படும். அதிகபட்சமாக கிட்டங்கியில் விளைபொருட்களை 180 நாட்கள் வரை இருப்பு வைத்துக் கொள்ளலாம்.

ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விளைபொருட்களை கொள்முதல் செய்யும் வியாபாரிகள், விவசாயிகளுக்கு உடனடியாக பணப்பட்டுவாடா செய்திட, ஏதுவாக வியாபாரிகளுக்கு பொருளீட்டு கடன் வழங்கப்படுகிறது. ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உரிமம் பெற்ற வியாபாரிகளுக்கு இருப்பு வைக்கப்படும் விளைபொருட்களின் மதிப்பில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை பொருளீட்டு கடன் வழங்கப்படுகிறது. வியாபாரிகளிடம் இருந்து பொருளீட்டு கடனுக்காக 9 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. அதிகபட்சமாக கிட்டங்கியில் விளைபொருட்களை 180 நாட்கள் வரை இருப்பு வைத்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story