வாலிபரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் பட்டினி போராட்டம் நடத்த முயற்சி


வாலிபரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் பட்டினி போராட்டம் நடத்த முயற்சி
x
தினத்தந்தி 22 Sept 2021 4:57 AM IST (Updated: 22 Sept 2021 4:57 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரியில் வாலிபரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் பட்டினி போராட்டம் நடத்த முயற்சி செய்தனர்.

சிவகிரி:
தென்காசி மாவட்டம் சிவகிரி பழைய போலீஸ் நிலையம் அருகே வசித்து வருபவர் முருகேசன் மகன் வேல்ராஜ் (வயது 24). இவர் கடந்த 16&ந் தேதி மதுரை&தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நொண்டி மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டார். 

அப்போது அங்கு திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் வேல்ராஜை கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிவகிரி அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் அங்கிருந்து சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 

இதுகுறித்து வேல்ராஜின் தாயார் லட்சுமி, சிவகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுதொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த கட்டித்துரை (52), அவரது தம்பி குட்டித்துரை (50), குட்டித்துரை மகன் வாஞ்சிநாதன், காளிராஜ், தேவி உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 

ஆனால் வழக்குப்பதிவு செய்யப்பட்டும், குற்றவாளிகளை போலீசார் கைது செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி வேல்ராஜின் உறவினர்கள் தென்காசி&மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாகும்வரை பட்டினி போராட்டம் நடத்த முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
 
அப்போது, வேல்ராஜை தாக்கியவர்களை கைது செய்ய சிவகிரி சப்&இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று இன்ஸ்பெக்டர் மனோகரன் தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Next Story