பின்னலாடைகளை ஏற்றி செல்லும் கன்டெய்னர் பற்றாக்குறை
மத்திய, மாநில அரசுகள் பின்னலாடைகளை ஏற்றி செல்லும் கன்டெய்னர் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என டீமா சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருப்பூர்
மத்திய, மாநில அரசுகள் பின்னலாடைகளை ஏற்றி செல்லும் கன்டெய்னர் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என டீமா சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கன்டெய்னர்கள் பற்றாக்குறை
திருப்பூரில் இருந்து தினமும் பல கோடி ரூபாய்க்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுபோல் உள்நாட்டு வர்த்தகமும் நடந்து வருகிறது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகள் திருப்பூரில் இருந்து தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட துறைமுகங்களுக்கு கன்டெய்னர்களில் கொண்டுசெல்லப்படுகிறது. இதன் பின்னர் அங்கிருந்து கப்பல்களில் ஏற்றிக்கொண்டு வெளிநாடுகளுக்கு ஆடைகள் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் தற்போது கன்டெய்னர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறையின் காரணமாக பல கோடி மதிப்பிலான ஆடைகள் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்க முடியாத நிலை உள்ளது. இதுபோல் ஆடைகளும் தேக்கமடைந்துள்ளன. இதனால் ஆர்டர்கள் ரத்தாகும் நிலை உள்ளதால் பல ஏற்றுமதியாளர்கள் செய்வது தெரியாமல் திகைக்கும் நிலை உள்ளது. இதன் காரணமாக கன்டெய்னர்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காண வேண்டும் என டீமா சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அரசு நடவடிக்கை
இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:
திருப்பூரில் தயாரிக்கப்படும் ஆடைகள் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வதற்கு முக்கிய பங்கு வகிப்பது கன்டெய்னர்கள் ஆகும். இந்த கன்டெய்னர்கள் மூலமாக தான் ஆடைகள் வெளிநாடுகளுக்கு செல்வதால், பலரும் கன்டெய்னர்களை பதிவு செய்து ஆடைகளை அனுப்பி வருகிறார்கள். இந்தியா போன்று இந்தோனேசியா, சீனா, வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகள் ஆடை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதன் காரணமாக கடுமையான வர்த்தக போட்டி நிலவி வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில் சீனாவின் சதி காரணமாக இந்தியாவில் கன்டெய்னர்கள் பற்றாக்குறை செயற்கையாக உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. வர்த்தக போட்டியை எதிர்கொள்ள முடியாத சீனா இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. எனவே கன்டெய்னர்கள் பற்றாக்குறைக்கு மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆடைகள் தேக்கமின்றி வெளிநாடுகளுக்கு செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.
தொழிலாளர்கள் பற்றாக்குறை
இதுபோல் திருப்பூரில் தொழிலாளர்கள் பற்றாக்குறை தொடர்ந்து இருந்து வருகிறது. கொரோனா பாதிப்பின் காரணமாக பலர் சொந்த ஊர்களிலேயே இருந்து விட்டார்கள். தற்போது தான் திருப்பூருக்கு வர தொடங்கியுள்ளனர். தீபாவளி பண்டிகைக்கான சீசன் தொடங்க உள்ள நிலையில் 50 சதவீத தொழிலாளர்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. எனவே தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காண வேண்டும்.
மேலும், புதிய ஜவுளிக்கொள்கை அறிவிப்பில் ரூ.100 கோடி, ரூ.200 கோடி வரை முதலீடு செய்யும் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் இருந்து வருகிறது. திருப்பூர் என்றாலே சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தான் என்ற அளவிற்கு உள்ளது. இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வளர்ச்சி பெற செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
Related Tags :
Next Story