ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் குடியேற குடும்பத்துடன் வந்த விவசாயி - போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு


ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் குடியேற குடும்பத்துடன் வந்த விவசாயி - போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 22 Sept 2021 6:32 PM IST (Updated: 22 Sept 2021 6:32 PM IST)
t-max-icont-min-icon

ஒரத்தநாடு அருகே மின் இணைப்பு, குடிநீர் வசதி துண்டிக்கப்பட்டதை கண்டித்து தஞ்சை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்திற்கு வந்த விவசாயி குடும்பத்தினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தொண்டராம்பட்டு வளையக்காடு கிராமத்தை சேர்ந்தவர் பிச்சைக்கண்ணு(வயது 65). விவசாயியான இவர், கடந்த 70 வருடமாக அதே பகுதியில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். இவருக்கு சசிகலா, வேம்பரசி, நதியா என்ற 3 மகள்கள் உள்ளனர்.

அவர் குடியிருந்து வந்த நாட்களில் மின்சாரம் மற்றும் குடிநீர் ஆகியவற்றிற்கு அரசு விதிகளின்படி கட்டணம் செலுத்தி ரசீது பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் பிச்சைக்கண்ணு வீட்டிற்கு அருகில் குடியிருந்து வருபவர்கள், அவருடைய வீட்டிற்கு செல்லும் மின்சாரம் மற்றும் குடிநீர் குழாய்களை கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு துண்டித்து விட்டனர்.

இது குறித்து பிச்சைக்கண்ணு தஞ்சை மாவட்ட கலெக்டர், தஞ்சை வருவாய் கோட்டாட்சியர்(ஆர்.டி.ஓ.), ஒரத்தநாடு தாசில்தார், மின்சாரத்துறை மற்றும் குடிநீர் வாரிய துறை அதிகாரிகளுக்கு பல முறை புகார் மனு கொடுத்துள்ளார். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து பிச்சைக் கண்ணு அவரது மனைவி சமுத்திரம் மகள்கள் சசிகலா, வேம்பரசி, நதியா மற்றும் உறவினர்கள் என 20-க்கும் மேற்பட்டோர் தமிழ்த்தேசிய முன்னேற்றக்கழகத்தின் மாவட்ட செயலாளர் வக்கீல் சந்திரசேகர் தலைமையிலும், மாநகர செயலாளர் வக்கீல் ராஜகுரு, ஒரத்தநாடு ஒன்றிய இளைஞரணி செயலாளர் அருணா சதீஷ் ஆகியோர் முன்னிலையிலும் தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்திற்காக வந்தனர்.

இவர்கள் அனைவரும் ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே உள்ள கோர்ட்டு அருகில் இருந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கபிலன் தலைமையிலான போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீதர்(தஞ்சை தெற்கு), அனிதாகிரேசி மற்றும் போலீசார் கோர்ட்டு அருகே உள்ள சாலையில் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட வந்தவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உங்களது கோரிக்கைகளை புகார் மனுவாக எழுதிக்கொடுங்கள் என்று கூறினர். இதையடுத்து பிச்சைக்கண்ணு குடும்பத்தினர் தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி தஞ்சை வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சிவகுமாரிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story