குமரியில் இதுவரை 11¼ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


குமரியில் இதுவரை 11¼ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 22 Sept 2021 9:22 PM IST (Updated: 22 Sept 2021 9:22 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் இதுவரை 11¼ லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கொரோனா 2-வது அலை பரவல் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. அதோடு 3-வது அலை பரவ விடாமல் தடுக்கவும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவற்றில் ஒன்றாக தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகிய இடங்களில் மட்டும் நடைபெற்று வந்த தடுப்பூசி முகாம் தற்போது பஸ் நிலையங்கள் மற்றும் வீடு வீடாக சென்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

மேலும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தும் பணி நடக்கிறது. கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் இதர நோய் உள்ளவர்களுக்கும் முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது. இதனால் குமரி மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

அந்த வகையில் குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி முதற்கட்ட தடுப்பூசி 9 லட்சத்து 3 ஆயிரத்து 410 பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளது. 2-ம் கட்ட தடுப்பூசி 2 லட்சத்து 33 ஆயிரத்து 337 பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளது. அந்த வகையில் இதுவரை மொத்தம் 11 லட்சத்து 36 ஆயிரத்து 747 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது.

குமரி மாவட்டத்தில் நேற்று 64 இடங்களில் கோவேக்சின் தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர். பெரும்பாலும் முதியவர்களே கோவேக்சின் தடுப்பூசி போட ஆர்வம் காட்டினர். மேலும் கர்ப்பிணிகளும் வரிசையில் நின்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். வடிவீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் வரிசையில் நின்று தடுப்பூசி போட்டு கொண்டனர். இதே போல ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியிலும் தடுப்பூசி செலுத்தி கொள்ள கூட்டம் அதிகமாக இருந்தது.

தற்போது கொரோனா சளி பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி மூலமாகவும், களப்பணியாளர்கள் மற்றும் சோதனை சாவடிகள் மூலமாகவும் இதுவரை 11 லட்சத்து 18 ஆயிரத்து 400 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் நேற்று முன்தினம் நிலவரப்படி 59 ஆயிரத்து 183 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 56 ஆயிரத்து 953 பேர் குணமடைந்துள்ளனர்.

இதற்கிடையே விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது முக கவசம் அணியாதது மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதது உள்ளிட்ட காரணங்களுக்காக அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 640 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.2 கோடியே 66 லட்சத்து 49 ஆயிரத்து 300 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Next Story