தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறப்பு:கிருஷ்ணகிரி உள்பட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறப்பு:கிருஷ்ணகிரி உள்பட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 22 Sept 2021 9:41 PM IST (Updated: 22 Sept 2021 9:41 PM IST)
t-max-icont-min-icon

தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரி உள்பட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

கிருஷ்ணகிரி:
தென்பெண்ணை ஆறு
கர்நாடக மாநிலம் நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்கள் வழியாக சென்று கடலில் கலக்கிறது. தமிழகத்தில் இந்த அணையின் குறுக்கே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி, கிருஷ்ணகிரி அருகே உள்ள முத்தூர், திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் ஆகிய இடங்களில் அணைகள் உள்ளன. 
இந்த அணைகள் மூலம் பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி அணை மூலம் 16 ஊராட்சிகளில் உள்ள 9 ஆயிரத்து 12 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்தநிலையில் கிருஷ்ணகிரி அணையில் இருந்து கடந்த ஜூலை மாதம் 26&ந் தேதி முதல், முதல்போக பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. வருகிற நவம்பர் மாதம் 22&ந் தேதி வரை, அதாவது 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. 
நீர்வரத்து அதிகரிப்பு
தற்போது கடந்த சில நாட்களாக தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால்  கிருஷ்ணகிரி அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 711 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 
இதனால் அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 51 அடிக்கு தண்ணீர் தேங்கி, கடல் போல் காட்சியளிக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக வலது மற்றும் இடதுபுற கால்வாய்களில் வினாடிக்கு 177 கன அடி நீரும், தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 400 கன அடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவை பொறுத்தும், அணையின் பாதுகாப்பு கருதியும் அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது. 
வெள்ள அபாய எச்சரிக்கை
இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அவர் அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் தண்ணீர் முழுவதையும் வெளியேற்ற வேண்டியுள்ளதால், தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் மற்றும் தாழவான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தெரிவித்துள்ளார்.

Next Story