மாவட்ட செய்திகள்

மூத்த மகன் திருமணத்துக்கு பெண் கிடைக்காததால் விஷம் குடித்து தம்பதி தற்கொலை; மயானத்தில் பிணமாக கிடந்தனர் + "||" + suicide

மூத்த மகன் திருமணத்துக்கு பெண் கிடைக்காததால் விஷம் குடித்து தம்பதி தற்கொலை; மயானத்தில் பிணமாக கிடந்தனர்

மூத்த மகன் திருமணத்துக்கு பெண் கிடைக்காததால் விஷம் குடித்து தம்பதி தற்கொலை; மயானத்தில் பிணமாக கிடந்தனர்
காவேரிப்பட்டணம் அருகே மூத்த மகன் திருமணத்துக்கு பெண் கிடைக்காததால் விஷம் குடித்து தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.
காவேரிப்பட்டணம்:
2-வது மகன் காதல் திருமணம்
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள பாரூரை அடுத்த கீழ்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சாந்தாமணி (45). இந்த தம்பதிக்கு ரவீந்திரன் (26), சுரேந்திரன் (24) என்ற 2 மகன்கள் உள்ளனர். சுரேந்திரன் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அப்போது அவருக்கும், அதே நிறுவனத்தில் வேலை பார்த்த இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 
இந்தநிலையில் கடந்த ஆண்டு அவர்கள் இருவரும் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்காமல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் சுரேந்திரன் தனது காதல் மனைவியை அழைத்துக்கொண்டு கீழ்குப்பத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த முருகேசன், சாந்தாமணி ஆகியோர் மூத்த மகனுக்கு திருமணம் நடைபெறுவதற்கு முன்பே, சுரேந்திரன் காதல் திருமணம் செய்து கொண்டதால் அவரை கண்டித்தனர். பின்னர் அவர்களை ஏற்றுக்கொண்டு அனைவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
கணவன்-மனைவி தற்கொலை
இதனிடையே சுரேந்திரன் திருமணம் செய்து கொண்டதால், மூத்த மகனான ரவீந்திரனுக்கு பெண் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால் சுரேந்திரனுக்கும், பெற்றோருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அப்போது அவர்கள் Ôஉன்னால் தான் ரவீந்திரன் திருமணத்துக்கு பெண் கிடைக்கவில்லைÕ என்று கூறி சுரேந்திரனை திட்டியதாக கூறப்படுகிறது. மேலும் முருகேசன், சாந்தாமணி ஆகியோர் இதனால் மனவேதனையில் இருந்து வந்ததாகவும் தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் கணவன், மனைவி இருவரும் மனமுடைந்து வீட்டை விட்டு வெளியே சென்று விட்டனர். பின்னர் அவர்கள் அங்குள்ள மயானத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
சோகம்
நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கணவன், மனைவி இருவரும் சமாதி ஒன்றின் மேல் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனடியாக பாரூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையில் தகவல் அறிந்த அவர்களுடைய மகன்கள், உறவினர்கள் அங்கு திரண்டனர். மேலும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் மூத்த மகன் திருமணத்துக்கு பெண் கிடைக்காத விரக்தியில் அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரின் உடல்களையும் மீட்டு போச்சம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மூத்த மகன் திருமணத்துக்கு பெண் கிடைக்காத விரக்தியில் தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. விஷம் குடித்து தம்பதி தற்கொலை
பெங்களூரு அருகே விஷம் குடித்து தற்கொலை செய்த தம்பதியின் உடல்கள் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு உள்ளது.