தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 22 Sept 2021 9:58 PM IST (Updated: 22 Sept 2021 9:58 PM IST)
t-max-icont-min-icon

`தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற `வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

புகாருக்கு உடனடி தீர்வு;
வேகத்தடையில் வர்ணம் 

தென்காசி மாவட்டம் கடையத்தில் இருந்து அம்பை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள முதலியார்பட்டி பஸ் நிறுத்தம் அருகே ரெயில்வே கிராசிங் உள்ளது. இங்குள்ள ரெயில்வே கேட் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டது. அப்போது ரெயில்வே கேட் பகுதியில் இருபுறமும் இருந்த வேகத்தடையை அகற்றி விட்டு மீண்டும் புதிதாக வேகத்தடை அமைக்கப்பட்டது. அந்த வேகத்தடையின் மீது வெள்ளை வர்ணம் பூசாததால் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் அடிக்கடி நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதுகுறித்து புகார் பெட்டி பகுதியில் `வேகத்தடையில் வர்ணம் வேண்டும்‘ என்ற தலைப்பில் வாசகர் அம்ஜத் அனுப்பிய பதிவு செய்தியாக வெளியானது. இந்த புகார் மீது அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து வேகத்தடையில் வர்ணம் பூசப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த `தினத்தந்தி‘க்கும், அதிகாரிகளுக்கும் நன்றியையும், பாராட்டுகளையும் அவர் தெரிவித்துள்ளார்.

பழுதடைந்த மின்கம்பங்கள்

நெல்லை சந்திப்பு 6-வது வார்டு மோதிலால் தெருவில் சில மின்கம்பங்கள் பழுதடைந்து விட்டன. அவற்றில் சிமெண்டு பெயர்ந்து காட்சி அளிக்கின்றன. பல நாட்களாக இவ்வாறு காணப்படும் மின்கம்பங்களின் அருகில் செல்ல பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். எனவே, பாதிப்பு ஏற்படும் முன் இவற்றை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
&சுப்பிரமணியன், நெல்லை சந்திப்பு.

குடிநீர் குழாய் சீரமைக்கப்படுமா?

நெல்லை மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட 47-வது வார்டு நாராயணசாமி கோவில் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு பாதாள சாக்கடை பணியின்போது, பொதுமக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் நல்லி உடைபட்டு அது சரி செய்யப்படவில்லை. இதைத்தொடர்ந்து குழாயும் அகற்றப்பட்டது. இதனால் குடிநீர் வினியோகம் இல்லாமல் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குழாயை சீரமைத்து குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
செல்வானந்த், பேட்டை.


சுத்தம் செய்யப்படாத கழிவுநீர் ஓடை

ஏர்வாடி 4-வது வார்டு நல்லமுத்து அம்மன் கோவில் அருகில் கழிவுநீர் ஓடை உள்ளது. இந்த ஓடை பல நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் கொசுத்தொல்லையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே, கழிவுநீர் ஓடையை சுத்தம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ராஜகோபால், ஏர்வாடி.

இடிந்து விழும் நிலையில் நூலக அறை 

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்-புளியங்குடி சாலையில் உள்ளது முள்ளிக்குளம். இந்த கிராமத்தில் கிளை நூலகம் உள்ளது. இந்த நூலகத்தில் நூற்றுக்கணக்கான புரவலர்களும், உறுப்பினர்கள் உள்ளனர். தினந்தோறும் ஏராளமானோர் வந்து புத்தகங்களை படித்து விட்டு செல்கிறார்கள். நூலகத்தில் உள்ள ஒரு அறையில் புத்தகங்கள் வைக்கப்பட்டு இருந்தன. அந்த அறை இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் புத்தகங்களை, வாசகர்கள் உட்காரும் அறையில் வைத்திருப்பதால் இடையூறாக இருக்கிறது. நூலகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
பாண்டியன், முள்ளிக்குளம்.

சாக்கடை வசதி தேவை

கடையநல்லூர் அருகே உள்ள காசிதர்மம் மெயின்ரோட்டில் வீடுகளின் கழிவுநீர் சென்று கொண்டிருக்கிறது. பஸ் மற்றும் வாகனங்கள் செல்லும்போது சாக்கடை கழிவுநீர் ரோட்டோரம் செல்வோர் மீது விழுந்து மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, சாக்கடை செல்ல வசதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீரா, தென்காசி.

வாறுகால் வசதி ஏற்படுத்தப்படுமா?

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டயபுரம் சாலை தியேட்டர் பின்புறம் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. மேலும் மழைநீரால் அடித்து செல்லப்பட்டு குண்டும், குழியுமாகவும் கற்கள் பெயர்ந்தும் மோசமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். வாறுகால் வசதியும் இல்லை. எனவே, சாலையை சீரமைத்து வாறுகால் வசதி ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
கல்பனா, கோவில்பட்டி.

பயணிகள் நிழற்கூடம் வேண்டும்

சாத்தான்குளம் அருகே அரசூர் கலியன்விளையில் நிழற்கூடம் புதுப்பிப்பதற்காக இடிக்கப்பட்டது. ஆனால், பல ஆண்டுகள் ஆகியும் அது கடடப்படவில்லை. அந்த பஸ் நிறுத்தத்தில் மாணவ, மாணவிகள், முதியோர் உள்பட அனைவரும் பஸ்சுக்காக காத்திருக்கிறார்கள். ஆனால், நிழற்கூட வசதி இல்லாததால் அவதிப்படுகிறார்கள். எனவே, அந்த பகுதியில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க வேண்டுகிறேன்.
செந்தில்குமார், கலியன்விளை.

சுகாதார சீர்கேடு

ஓட்டப்பிடாரம் தாலுகா முள்ளூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட முத்துக்குமரபுரத்தில் அங்கன்வாடி மையம் உள்ளது. மழைக்காலங்களில் இந்த மையம் முன்பு தண்ணீர் தேங்கி விடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் அந்த மையத்துக்கு வருபவர்கள் மற்றும் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முனியசாமி, முத்துக்குமரபுரம்.


Next Story