வனப்பகுதியில் விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும்
வருசநாடு அருகே அரசரடி வனப்பகுதியில் விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கலெக்டரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
தேனி:
விவசாயிகள் மனு
ஆண்டிப்பட்டி தாலுகா வருசநாடு மேகமலை ஊராட்சிக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் வசிக்கும் மக்களையும், அங்கு விவசாயம் செய்பவர்களையும் ஆக்கிரமிப்பாளர்கள் எனக்கூறி அவர்களை வனத்தை விட்டு வெளியேற்ற வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் வருசநாடு அருகே அரசரடி மலைக்கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் சிலர், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். கலெக்டர் முரளிதரனிடம் அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 1958&ம் ஆண்டு வனத்துறையினர் வருசநாடு மலைப்பகுதியில் ஊர், ஊராக பீனாரி எனப்படும் மரங்களை வளர்க்க மக்களை அழைத்து சென்றனர். அந்த வகையில் அரசரடியை சேர்ந்த மக்கள் முதல் பகுதியாக மஞ்சனூத்து கிராமத்தில் 3 ஆண்டுகள் மரங்கள் வளர்த்தனர்.
பின்னர், உடங்கல் பகுதியில் 3 ஆண்டுகள் மரம் வளர்த்தனர். கடைசியாக 1974&ம் ஆண்டு எங்களை அரசரடி பகுதியில் மரம் வளர்த்து அங்கேயே விவசாயம் செய்ய வனத்துறையினர் அனுமதித்தனர்.
வாழ்வாதாரம் பாதிப்பு
பின்னர் நாங்கள் விவசாயம் செய்த நிலத்தை அளவீடு செய்து கல் ஊன்றி, கற்றாழை செடிகள் நட்டு அந்த பகுதியில் தொடர்ந்து விவசாயம் செய்து வந்தோம்.
தற்போது எங்கள் நிலத்தில் விவசாயம் செய்ய வனத்துறையினர் தடை விதிக்கின்றனர். இதனால், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
எனவே, எங்களை விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும். எங்களை வெளியேற்ற முயற்சித்தால், ஒரு குடும்பத்துக்கு 3 ஏக்கர் நிலமும், ஒரு வீடும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சாதிச்சான்று கேட்டு மனு
தேனி மாவட்ட மறவர் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் கேசவன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். கலெக்டர் முரளிதரனிடம் அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதில், நெல்லை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 200 ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெயர்ந்து தேனி மாவட்டத்தில் பல தலைமுறையாக வசித்து வரும் மறவர், ஆப்பநாடு கொண்டையன்கோட்டை மறவர் ஆகிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்து மறவர் என்று சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
மற்ற மாவட்டங்களில் புலம்பெயர்ந்தவர்களுக்கு சீர்மரபினர் என்று சான்றிதழ் வழங்கப்படுகிறது. எனவே தேனி மாவட்டத்தில் வசிக்கும் எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கும் சீர்மரபினர் என்று சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story