புதுச்சேரியில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்


புதுச்சேரியில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்
x
தினத்தந்தி 22 Sept 2021 10:36 PM IST (Updated: 22 Sept 2021 10:36 PM IST)
t-max-icont-min-icon

புதுவையில் உள்ள 5 நகராட்சிகள் மற்றும் 10 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சி தேர்தல்களை 3 கட்டங்களாக நடத்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

புதுச்சேரியில் 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் 
புதுச்சேரி, செப்.
புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் ராய் பி.தாமஸ் நேற்று தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வாக்காளர் பட்டியல் 
புதுவை மாநிலத்தில் கடந்த 2006&ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அதன்பின் தேர்தல் நடத்தப்படவில்லை. இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இதைத்தொடர்ந்து தேர்தலை 6 மாதத்துக்குள் நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. 
இதையடுத்து உள்ளாட்சி தேர்தலை நடத்த பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இடஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது. 
இந்தநிலையில் புதுவையில் உள்ள 5 நகராட்சிகள் மற்றும் 10 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சி தேர்தல்களை 3 கட்டங்களாக நடத்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இந்த தேர்தல் மூலம் 5 நகராட்சி தலைவர்கள், 116 நகராட்சி கவுன்சிலர்கள், கொம்யூன் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் 108 பேர், கிராம பஞ்சாயத்து தலைவர்கள் 108 பேர், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் 812 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 
3 கட்டங்களாக தேர்தல் 
முதல் கட்டமாக காரைக்கால், மாகி, ஏனாம் நகராட்சிகளுக்கும், கோட்டுச்சேரி, நெடுங்காடு, நிரவி, திருமலைராயன்பட்டினம், திருநள்ளாறு ஆகிய கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கும் தேர்தல் நடக்கிறது. இதற்காக 364 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள 2 லட்சத்து 30 ஆயிரத்து 502 பேர் வாக்களிக்க உள்ளனர். 
2&வது கட்டமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் நகராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக 631 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 4 லட்சத்து 44 ஆயிரத்து 199 பேர் வாக்களிக்க உள்ளனர். 
3&வது கட்டமாக புதுவை பிராந்தியத்தில் உள்ள அரியாங்குப்பம், பாகூர், மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்காக 634 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் 3 லட்சத்து 28 ஆயிரத்து 555 பேர் வாக்களிக்க உள்ளனர். 
 அதிகாரிகள் நியமனம்
தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி புதுச்சேரியில் 4 மையங்களிலும், காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் தலா ஒரு மையத்திலும் நடைபெறும். உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்காக ஏற்கனவே 15 தேர்தல் நடத்தும் அதிகாரிகள், 91 உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட கலெக்டர்கள் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதுபோலவே மாகி, ஏனாம் பகுதி வட்டார நிர்வாகிகளை அந்தந்த வட்டார தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். 
இதுதவிர உள்ளாட்சி தேர்தலை சிறப்பான முறையில் மேற்பார்வையிடவும், ஒருங்கிணைக்கவும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு என 4 செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 6 இந்திய சுங்க மற்றும் மத்திய, மாநில கலால், இந்திய வருவாய் பணி அதிகாரிகளை தேர்தல் செலவுகளை பார்வையிடும் அதிகாரிகளாகவும் நியமித்துள்ளது. 
8,500 அலுவலர்கள் 
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கென 1,629 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. அதில் தேர்தல் நடத்துவதற்கென 8 ஆயிரத்து 500 அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் 10 லட்சத்து 3 ஆயிரத்து 256 வாக்காளர்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற உள்ளனர். 
உள்ளாட்சி தேர்தலில் முதல்முறையாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்கான எந்திரங்கள் கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. அவை முதல்நிலை ஆய்வு செய்யப்பட்டு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 
கொரோனா பெருந்தொற்றை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்கள் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும். வேட்புமனு தாக்கலின்போது கூட்டம் கூடுவதை தடுக்கவும் கொரோனா நோயாளிகள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு வசதியாகவும் இணையதளத்தில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 
அக்டோபர் 31-ந் தேதி வாக்கு எண்ணிக்கை 
வாக்குப்பதிவு அதிகாரிகள் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தேர்தல் நடத்துவதற்கான படிவங்கள் வினியோக மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க வாக்குப்பதிவு எந்திரங்களும், தேர்தல் நடத்துவதற்கான படிவங்கள் உள்ளிட்ட பொருட்களையும் அந்தந்த வட்ட அதிகாரிகளே துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கே நேரில் சென்று கொடுப்பதற்கான பிரத்தியேக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறும். இதில் கடைசி ஒரு மணிநேரம் கொரோனா நோயாளிகள் வாக்கு அளிக்க வழங்கப்படுகிறது. 3 கட்ட வாக்குப்பதிவு முடிந்தவுடன் அக்டோபர் 31&ந்தேதி வாக்குகள் எண்ணப்படும். தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகிறது. 
இவ்வாறு மாநில தேர்தல் ஆணையர் ராய் பி.தாமஸ் கூறினார். 


Next Story