மேல்மலையனூர் அருகே கடன் தொல்லையால் ஆசிரியர் தற்கொலை உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
மேல்மலையனூர் அருகே கடன் தொல்லையால் ஆசிரியர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
மேல்மலையனூர்,
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே கண்டமநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் அண்ணாமலை (வயது 54). இவர் கம்மந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று காலை அண்ணாமலை ஒரு விவசாய நிலத்தில் விஷம் குடித்து இறந்துகிடந்தார். தகவல் அறிந்த வளத்தி போலீசார் இன்ஸ்பெக்டர் கலையரசி தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, விசாரணை நடத்தினர். அப்போது, அண்ணாமலை அணிந்திருந்த சட்டைபையில் கடிதம் ஒன்று இருந்தது. அதை கைப்பற்றி, பார்த்தனர்.
4 பேர் மீது வழக்கு
அப்போது, அந்த கடிதத்தில், தான் திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரம் கிராமத்தில் திருமணம் மண்டபம் கட்டுவதற்கு ஆத்துறை கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன், கீழ்பெண்ணாத்தூர் கல்வி அலுவலர் ஸ்ரீராமுலு, மேல்மலையனூர் ஆசிரியர் ராஜாராமன், வளத்தி பத்திர எழுத்தர் பாரதி ஆகியோரிடம் கடன் வாங்கி இருந்தேன்.
அவர்கள் அந்த கடன் தொகையை திருப்பி கேட்டும், திருமண மண்டபத்தை எழுதி தரும்படியும் தன்னிடம் மிரட்டி வந்ததால், தற்கொலை செய்து கொள்வதாக அதில் எழுதியிருந்தார்.
இதையடுத்து, அண்ணாமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வெங்கடேசன், ஸ்ரீராமுலு, ராஜாராமன், பாரதி ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சாலை மறியல்
இதற்கிடையே அண்ணாமலையின் தற்கொலைக்கு காரணமான 4 பேரையும் கைது செய்ய கோரி, அவரது உறவினர்கள் செஞ்சி-சேத்துப்பட்டு சாலையில் தேவனூர் கூட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
வளத்தி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story