கள்ளக்குறிச்சியில் பரபரப்பு கலெக்டர் அலுவலகம் முன்பு கல்லூரி மாணவ மாணவிகள் சாலை மறியல்


கள்ளக்குறிச்சியில் பரபரப்பு கலெக்டர் அலுவலகம் முன்பு கல்லூரி மாணவ மாணவிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 22 Sep 2021 5:58 PM GMT (Updated: 22 Sep 2021 5:58 PM GMT)

கட்டிட வசதி செய்து தரக்கோரி கள்ளக்குறிச்சி அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கள்ளக்குறிச்சி

அரசு கலைக்கல்லூரி

கள்ளக்குறிச்சி அரசு கலைக்கல்லூரி சிறுவங்கூர் சமத்துவபுரம் அருகில் சொந்த கட்டிடத்தில் இயங்கி வந்து. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த 2019-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்காக அரசு கல்லூரிக்கு சொந்தமான கட்டிடம் உள்பட 5 ஏக்கர் இடத்தை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்காக சுகாதாரத்துறை எடுத்துக் கொண்டது.
அதற்கு பதிலாக சடையம்பட்டு கிராமத்தில் 5 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டு, புதிதாக கட்டிடம் கட்டுவதற்கு ரூ.11 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்து கடந்த பிப்ரவரி மாதம் டெண்டரும் விடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கல்லூரி கட்டுமான பணி இதுவரை தொடங்கவில்லை.

கல்லூரி அலுவலகம்

இதற்கிடையே அரசு கல்லூரி இயங்கி வந்த கட்டிடம் கொரோனா நோயாளிகள் சிகிச்சை மையமாக மாற்றப்பட்டதை அடுத்து கடந்த 2020-ம் ஆண்டு குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடத்திலும், இந்த ஆண்டு ஜனவரி முதல் 3 மாதங்கள் வரை கல்லூரி கட்டிடத்திலும் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டது. 
பின்னர் கொரோனா தொற்று 2-ம் அலை காரணமாக கல்லூரி கட்டிடத்தை மருத்துவமனை நிர்வாகம் எடுத்துக்கொண்டதை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை கள்ளக்குறிச்சியில் உள்ள ஏமப்பேர் அரசு உயர்நிலைப்பள்ளி கட்டிடத்தில் கல்லூரி அலுவலகம் மட்டும் இயங்கி வருகிறது. அங்கு தற்போது மாணவர் சேர்க்கை மற்றும் மதிப்பெண் பட்டியல், மாற்றுச்சான்றிதழ் வழங்கும் பணி மட்டும் நடைபெற்று வருகிறது. 

சாலைமறியல்

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கடந்த 1-ந் தேதி முதல் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஆனால் கட்டிட வசதி இல்லாததால் கள்ளக்குறிச்சி அரசு கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு வகுப்புகள் நடைபெற வில்லை. இதனால் மாணவிகளின் கல்வி கேள்விக்குறியானது.
இந்த நிலையில் கல்லூரிக்கு கட்டிட வசதி செய்து தரக்கோரி 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நேற்று காலை 11 மணியளவில் கள்ளக்குறிச்சி 4 முனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்து வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு), பாலசுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

கலெக்டர் அலுவலகம் முற்றுகை

இதன் பின்னர் மறியலை கைவிட்ட மாணவ-மாணவிகள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு காந்தி ரோடு, கச்சிராயப்பாளையம் சாலை வழியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் தாசில்தார் விஜய்பிரபாகரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 
இதில் சமரசம் ஏற்படாததால் ஆத்திரம் அடைந்த மாணவ-மாணவிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். சில நிமிடங்களுக்கு பின்னர் மறியலை கைவிட்ட மாணவ-மாணவிகள் மீண்டும் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பேச்சுவார்த்தை

பின்னர் அங்கிருந்து கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைந்த மாணவ-மாணவிகளிடம் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் சரவணன், தாசில்தார் விஜயபிரபாகரன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது வருகிற திங்கட்கிழமை முதல் வகுப்புகள் நடத்துவதற்கு கனியாமூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி கட்டிடத்தை ஏற்பாடு செய்து தருவதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட மாணவ-மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கல்லூரிக்கு கட்டிட வசதி செய்து தரக்கோரி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை கல்லூரி மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story