கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி
நச்சலூர் அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான்.
நச்சலூர்
4 வயது சிறுவன்
திருச்சி மாவட்டம் கோப்பு பகுதியை சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி மஞ்சுளா. இந்ததம்பதிக்கு கவுதம் (வயது 4) என்ற மகனும், பவனிகா (2) என்ற மகளும் உள்ளனர். காமராஜ் தனது மாமனார் ஊரான குளித்தலை தாலுகா முதலைப்பட்டி பாளையத்தான் தோட்டம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும், காமராஜ் தனது மாமனாருக்கு சொந்தமான 20 சென்ட் நிலத்தில் மல்லிகை பூச்செடிகளை சாகுபடி செய்து வருகிறார்.
தினந்தோறும் காமராஜ் பூங்காட்டிற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு செல்லும்போது தனது மகன் கவுதமையும் அழைத்து சென்று வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று காலையும் வழக்கம்போல், காமராஜ் தனது மகன் கவுதமை பூங்காட்டிற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு உடன் அழைத்து சென்றுள்ளார். அப்போது பூங்காட்டில் கவுதம் அங்கும், இங்குமாக ஓடியாடி விளையாடி கொண்டிருந்தான். இதனால் காமராஜ் அதே பகுதியில் உள்ள தனது வீட்டில் கொண்டு போய் கவுதமை விட்டு விட்டு மீண்டும் பூக்காட்டிற்கு வந்து தண்ணீர் பாய்ச்சினார். பின்னர் வீட்டிற்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.
கிணற்றில் மூழ்கி பலி
அப்போது பூங்காட்டில் உள்ள கிணற்றின் பட்டிக்கட்டில் கவுதமனின் டி&சர்ட் மட்டும் தனியாக இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த காமராஜ் கிணற்றுக்குள் குதித்து மகனை தேடிபார்த்தார். அப்போது கிணற்றின் அடியில் மூழ்கிய நிலையில் சிறுவன் கவுதம் மூச்சு, பேச்சு இல்லாமல் கிடந்துள்ளான்.
இதையடுத்து கவுதமை தூக்கி கொண்டு அக்கம், பக்கத்தினரின் உதவியுடன் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு காமராஜ் கொண்டு சென்றார். அங்கு கவுதமை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து காமராஜ் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story