புதுக்கோட்டை மாவட்ட 9-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க.வை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளர் மனு தாக்கல் இரு கட்சியினரிடையே பரபரப்பு


புதுக்கோட்டை மாவட்ட 9-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க.வை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளர் மனு தாக்கல் இரு கட்சியினரிடையே பரபரப்பு
x
தினத்தந்தி 23 Sept 2021 12:36 AM IST (Updated: 23 Sept 2021 12:36 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்ட 9-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து கூட்டணி கட்சியை சேர்ந்த பா.ஜ.க. வேட்பாளரும் மனு தாக்கல் செய்தார். இது இரு கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.

அன்னவாசல்:
ஊரக உள்ளாட்சி தேர்தல் 
புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியில் தலா ஒரு இடத்திற்கும், 5 ஊராட்சி தலைவர்கள் பதவிக்கும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளில் 41 இடங்களுக்கும் அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 
புதுக்கோட்டை மாவட்ட 9-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தங்கையா என்பவர் கடந்த ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து அந்த இடத்திற்கான இடைத்தேர்தல் தற்போது நடைபெற உள்ளது. அன்னவாசல் ஒன்றியத்திற்குட்பட்டு வரும் இந்த வார்டில் போட்டியிட தி.மு.க. சார்பில் ஏற்கனவே பழனிச்சாமி என்பவர் வேட்புமனு தாக்கல் செய்து விட்டார். 
இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று அ.தி.மு.க. சார்பில் அழகுசுந்தரி என்பவர் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமையில் ஊர்வலமாக வந்து அன்னவாசல் ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் லட்சுமியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பா.ஜ.க. மனு தாக்கல்
இந்நிலையில், அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சியான பா.ஜ.க.வை சேர்ந்த சாந்தார் என்பவர் மாவட்ட 9-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்து அன்னவாசல் ஒன்றிய அலுவலகத்திற்கு அக்கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் சிவசாமி கண்டியார் தலைமையில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து கூட்டணி கட்சியான பா.ஜ.க.வும் வேட்பாளரை நிறுத்தியுள்ளது இரு கட்சியினரிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாவட்ட பொது செயலாளர் சிவசாமி கண்டியார் நிருபர்களிடம் கூறுகையில், பா.ஜ.க. தலைமை புதுக்கோட்டை மாவட்ட கவுன்சிலர் 9-வது வார்டு பதவிக்கு போட்டியிட கூறியதால் தற்போது சாந்தார் என்பவரை வேட்பாளராக அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளோம். தலைமை உத்தரவிட்டதால் தான் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுகிறோம். அடுத்த தலைமை என்ன சொல்கிறதோ அதன்படி நாங்கள் செயல்படுவோம், என்றார். 


Next Story