வேலூர் மாவட்டத்தில் 8,170 பேர் வேட்புமனு தாக்கல்


வேலூர் மாவட்டத்தில்  8,170 பேர் வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 23 Sept 2021 12:38 AM IST (Updated: 23 Sept 2021 12:38 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பதவிகளுக்கு கடைசிநாளில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 8,170 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பதவிகளுக்கு கடைசிநாளில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 8,170 பேர் வேட்புமனு தாக்கல்  செய்தனர்.

உள்ளாட்சி தேர்தல்

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்பட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் (அக்டோபர்) 6, 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15&ந் தேதி தொடங்கியது. வேலூர் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடுபவர்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் நபர்கள் ஊராட்சிமன்ற அலுவலகங்களிலும் மனுதாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

வேலூர் மாவட்டத்தில் 14 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 138 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 247 கிராம ஊராட்சி தலைவர், 2,079 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என்று 2,478 பதவிகளுக்கு நேற்று முன்தினம் வரை 5,052 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் கடைசிநாள் என்பதால் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஊராட்சிமன்ற அலுவலகங்களுக்கு காலை 9 மணி முதல் பலர் வேட்புமனு தாக்கல் செய்ய தங்கள் ஆதரவாளர்களுடன் வந்தனர். நேரம் செல்ல செல்ல வேட்புமனு தாக்கல் செய்ய வந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. வேட்பாளர்கள் மற்றும் அவர்களுடன் வந்தவர்கள், பொதுமக்கள் என்று ஏராளமானோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு குவிந்தனர்.

தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்கள்

தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது. அதனால் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்கள் புடைசூழ வந்து நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவிதேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்பாளர்களின் மனுக்களை பெற்றுக்கொண்டனர். ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கூட்டம் அலைமோதியது. இதேபோன்று கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்குக்கும் ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதையொட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், ஊராட்சிமன்ற அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று (வியாழக்கிழமை) வேட்புமனு பரிசீலனை செய்யப்படுகிறது. மனுக்களை வாபஸ் பெற 25&ந் தேதி கடைசி நாளாகும்.

8,170 பேர் வேட்புமனு தாக்கல்

வேலூர் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 71 பேரும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 472 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 368 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2,207 பேர் என்று நேற்று ஒரேநாளில் 3,118 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
14 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 93 பேர், 138 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 741 பேர், 247 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 1,192 பேர், 2,079 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 6,144 பேர் என்று 2,478 பதவிகளுக்கு 8,170 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் 510 பதவிகளுக்கு 1,729 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்தில் 497 பதவிகளுக்கு 1,690 பேரும், கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றியத்தில் 395 பதவிகளுக்கு 1,298 பேரும், கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் 239 பதவிகளுக்கு 816 பேரும், காட்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் 394 பதவிகளுக்கு 1,102 பேரும், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் 254 பதவிகளுக்கு 890 பேரும், வேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 189 பதவிகளுக்கு 645 பேரும் மனு தாக்கல் செய்தனர்.

Next Story