கறம்பக்குடி அருகே மழையூர் மண் சிற்பங்களை பார்த்து வியந்த கலெக்டர் உலக சுற்றுலா தினத்தில் காட்சி படுத்த ஏற்பாடு
மழையூர் மண் சிற்பங்களை பார்த்து கலெக்டர் வியந்தார்.
கறம்பக்குடி:
கறம்பக்குடி அருகே உள்ள மழையூரில் மண் சிற்பங்கள் மற்றும் மண்பாண்டங்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள் சுமார் 70 பேர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இங்கு செய்யப்படும் டெரக்கோட்டா எனப்படும் மண் சிற்பங்கள் வெளிநாடுகளிலும் பிரசித்தி பெற்றவை. இப்பகுதி தொழிலாளர்கள் அமெரிக்கா, சிங்கப்பூர், ஜப்பான், மலேசியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு இங்கிருந்து களிமண்ணை எடுத்து சென்று டெரக்கோட்டா சிறபங்களை உருவாக்கி கொடுத்து உள்ளனர். இந்நிலையில் வருகின்ற 27-ந்தேதி உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருமைமிகுந்த சுற்றுலா தலங்களையும், பாரம்பரியம் மிக்க கலை பண்பாட்டு பகுதிகளையும் புதுக்கோட்டை கலெக்டர் கவிதா ராமு பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். இதன்படி மழையூர் டெரக்கோட்டா பொம்மை தயாரிப்பு குறித்து அறிந்த கலெக்டர் நேற்று மழையூருக்கு வந்தார். அங்கு கலைநயத்துடன் செய்யப்பட்டிருந்த பொம்மைகள் மற்றும் சிற்பங்களை பார்த்து வியப்படைந்தார். அந்த மண் சிற்பங்களை அவரது செல்போனில் படம் பிடித்தார். தொடர்ந்து மண் சிற்பங்கள் தயாரிப்பு, சந்தைபடுத்துவது குறித்த விபரங்களை கேட்டறிந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக தொழில் நலிவு, தொழில்கூடம் இல்லாதது குறித்து தொழிலாளர்கள் கலெக்டரிடம் தெரிவித்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த கலெக்டர் கவிதா ராமு, அங்கு தயாரிக்கப்படும் மண் சிற்பங்களை உலக சுற்றலா தினத்தில் காட்சிப்படுத்த ஏற்பாடு செய்வதாக கூறினார். இதில் கலெக்டருடன் கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன், ஒன்றியக்குழு தலைவர் மாலா ராஜேந்திரதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆயிஷா ராணி, குமாரவேலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story