பெண்ணை கொலை செய்ததாக கியாஸ் நிறுவன தொழிலாளி கைது


பெண்ணை கொலை செய்ததாக கியாஸ் நிறுவன தொழிலாளி கைது
x
தினத்தந்தி 23 Sept 2021 1:37 AM IST (Updated: 23 Sept 2021 1:37 AM IST)
t-max-icont-min-icon

வேப்பந்தட்டை அருகே பெண்ணை கொலை செய்ததாக கியாஸ் நிறுவன தொழிலாளி கைது செய்யப்பட்டார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால் தீர்த்துக்கட்டியதாக போலீசாரிடம் அவர் வாக்குமூலம் அளித்தார்.

வேப்பந்தட்டை
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அ.மேட்டூர் காந்தி நகரை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி புஷ்பா (வயது 47). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர்கள் டெல்லியில் வசித்து வருகின்றனர். விஜயன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். புஷ்பா, தனது தாய் பெருமாயியுடன் வசித்து வந்தார். கடந்த 7 ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற புஷ்பா பின்னர் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் நேற்று முன்தினம் அன்னமங்கலம் வனப்பகுதியில் புஷ்பா அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். போலீசார், புஷ்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து புஷ்பாவின் செல்போன் இணைப்புக்கு வந்த தொடர்பினை வைத்து போலீசார் விசாரணை நடத்தியபோது அ.மேட்டூரை சேர்ந்த சோலைமுத்து (42) என்பவர் புஷ்பாவிடம் கடைசியாக பேசியது தெரிய வந்தது. இவர் அரும்பாவூரில் உள்ள சமையல் கியாஸ் விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றினார். 
 வாக்குமூலம்
இதனைத் தொடர்ந்து போலீசார் நேற்று சோலைமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் புஷ்பாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்ட அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு புஷ்பாவுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. பல்வேறு இடங்களில் உல்லாசமாக இருந்தோம். கடந்த 7-ந் தேதி அன்னமங்கலம் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்தேன். அப்போது என்னை புஷ்பா திருமணம் செய்து கொள்ளவேண்டும் என வற்புறுத்தினார். எனக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருப்பதை எடுத்துக் கூறியும் அதனைப் பொருட்படுத்தாமல் திருமணம் செய்து கொள்ள வேண்டும், இல்லை என்றால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினார்.
 எனவே புஷ்பாவின் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்து விட்டு அவரிடம் இருந்த ரூ.25 ஆயிரத்து 700 பணத்தை எடுத்துக் கொண்டு தப்பி வந்து விட்டேன். தற்போது போலீசாரிடம் சிக்கிக் கொண்டேன் என கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர், சோலைமுத்து பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story