முட்டம் மீனவர்கள் 23 பேர் காயம்
நடுக்கடலில் விசைப்படகு கவிழ்ந்தது. இதில் முட்டம் மீனவர்கள் 23 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
ராஜாக்கமங்கலம்:
நடுக்கடலில் விசைப்படகு கவிழ்ந்தது. இதில் முட்டம் மீனவர்கள் 23 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
இச்சம்பவம் குறித்து கடலோர பாதுகாப்புபடை போலீசார் கூறியதாவது:-
படகு கவிழ்ந்தது
முட்டம் கிறிஸ்துராஜாநகரை சேர்ந்தவர் அர்த்தனாஸ். இவருக்கு சொந்தமான விசைப்படகில் அர்த்தனாஸ் உள்பட 23 மீனவர்கள் நேற்று முன்தினம் காலை முட்டம் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நேற்று மதியம் முட்டத்தில் இருந்து 25 நாட்டிக்கல் மைல் தூரத்தில் விசைப்படகில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது நடுக்கடலில் திடீரென சூறைக்காற்று வீசியது.
இதனால் அலைகள் 6 முதல் 12 அடி வரை எழுந்தது. மேலும் படகின் ஒரு பகுதியில் கடலில் பிடித்த மீன்கள் மற்றும் அவற்றை பதப்படுத்த பயன்படுத்தும் ஐஸ் கட்டிகளும் வைக்கப்பட்டு இருந்தன. இதனால் பாரம் தாங்காமல் விசைப்படகு ஒருபுறமாக சாய்ந்து கவிழ்ந்தது.
23 மீனவர்கள் காயம்
படகில் இருந்த அர்த்தனாஸ் உள்பட 23 மீனவர்களும் கடலில் தத்தளித்தனர். உடனே அருகே மற்றொரு விசைப்படகில் வந்த மீனவர்கள், கடலில் தத்தளித்தவர்கள் அனைவரையும் மீட்டனர். மேலும் அவர்கள் வெறொரு விசைப்படகில் கரைக்கு கொண்டு வரப்பட்டனர். அப்போது தான் 23 மீனவர்களும் காயம் அடைந்தது தெரிய வந்தது. காயம் அடைந்த மீனவர்கள் 23 பேரும் நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்றனர். இதுபற்றி குளச்சல் கடலோர பாதுகாப்படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் விரைந்து வந்து கவிழ்ந்த படகை மீட்டு கரைக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து குளச்சல் கடலோர பாதுகாப்புபடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story