தீவிபத்து நடந்த அடுக்குமாடி குடியிருப்பில் தடயவியல், மின்வாரிய அதிகாரிகள் தீவிர விசாரணை
பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் தாய், மகள் பலியான விவகாரத்தில் தடயவியல் நிபுணர்கள், மின்வாரிய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். கியாஸ் சிலிண்டர்கள் வெடிக்காததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
பெங்களூரு: பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் தாய், மகள் பலியான விவகாரத்தில் தடயவியல் நிபுணர்கள், மின்வாரிய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். கியாஸ் சிலிண்டர்கள் வெடிக்காததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
தாய், மகள் சாவு
பெங்களூரு பேகூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பன்னரகட்டா ரோடு, தேவரசிக்கனஹள்ளியில் அஸ்ரிதா என்ற பெயரில் 4 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டில் இருந்தே, அங்குள்ள 72 குடியிருப்பு வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். அந்த குடியிருப்பின் 3-வது மாடியில் 210-வது எண் கொண்ட வீட்டில் பீம்சேன் ராவ் வசித்து வருகிறார். அவரது மனைவி பாக்ய ரேகா(வயது 59). மகள்கள் பெயர் ஸ்வாதி மற்றும் ப்ரீத்தி என்பதாகும்.
பீம்சேன் ராவுக்கு, அதே அடுக்குமாடி குடியிருப்பில் மற்றொரு வீடும் உள்ளது. அதாவது 211 எண் கொண்ட வீடும் அவருக்கு சொந்தமானதாகும். அந்த வீட்டை மகள் ஸ்வாதிக்கு பீம்சேன் ராவ் வாங்கி கொடுத்திருந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் பீம்சேன் ராவ் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் அவரது மனைவி பாக்ய ரேகா, அவருடைய தாய் லட்சுமி தேவி(82) ஆகிய 2 பேரும் உடல் கருதி உயிர் இழந்திருந்தனர். இதுகுறித்து பேகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தடயவியல் நிபுணர்கள்...
பீம்சேன் ராவ் வீட்டில் எப்படி தீப்பிடித்தது, அதற்கான காரணம் என்ன? என்பது தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக நேற்று பேகூர் போலீசார், தடயவியல் நிபுணர்கள், மின்வாரிய (பெஸ்காம்) அதிகாரிகள் அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றனர். தீ விபத்து நடந்த வீட்டில் கிடந்த பொருட்களை கைப்பற்றி தடயவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தினார்கள். வீட்டில் இருந்த அனைத்து பொருட்களுமே முற்றிலும் எரிந்து நாசமாகி இருந்தது தெரியவந்தது.
குறிப்பாக டி.வி, பிரிட்ஜ் உள்ளிட்ட அனைத்து மின்சாதன பொருட்களும் எரிந்திருந்தது. அந்த பொருட்களில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்திருக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில் வீட்டு சமையல் அறையில் இருந்த 2 கியாஸ் சிலிண்டர்களும் வெடிக்காமல் அப்படியே இருக்கிறது. இதன் காரணமாக கியாஸ் சிலிண்டர்கள் வெடிக்கவில்லை என்பதும், அதனால் வீட்டில் தீவிபத்து ஏற்படவில்லை என்றும் தெரியவந்தது.
உள்அலங்கார மரப்பொருட்கள்
அதே நேரத்தில் சிலிண்டர்களுடன் இணைக்கப்பட்டு இருந்த கியாஸ் குழாயின் மூலமாக கியாஸ் கசிவு ஏற்பட்டு இருக்கலாம் என்றும், அதன் காரணமாக பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக குடியிருப்பில் தான் வசித்த அந்த வீட்டை மரப்பொருட்களால் பீம்சேன் ராவ் அலங்காரம் செய்திருந்தார். பல லட்சம் ரூபாய் செலவில் உள்அலங்காரம் செய்திருந்ததும், அந்த மரப்பொருட்கள் அனைத்தும் எரிந்திருந்ததும் தெரியவந்தது.
பீம்சேன் ராவ் வீடு முழுவதும் தீப்பிடிக்க இந்த உள்அலங்கார மரப்பொருட்களும் முக்கிய காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பூஜை அறை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விளக்குகளை ஏற்றி வைத்து இருந்ததும் தெரியவந்தது. அதன்மூலமாக தீப்பிடித்ததா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. என்றாலும், எங்கிருந்து முதலில் தீப்பிடித்தது, வீட்டின் எந்த அறையில் தீப்பிடித்தது என்பது பற்றி தடயவியல் நிபுணர்கள், போலீசாருக்கு இன்னும் சரியான தகவல்கள் கிடைக்கவில்லை.
பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
இதையடுத்து, பீம்சேன் ராவ் வீட்டில் தீப்பிடிக்க என்ன காரணம் என்பதை கண்டறிய, அவரது வீட்டில் எரிந்திருந்த 20-க்கும் மேற்பட்ட பொருட்கள், முக்கிய ஆதாரங்களை கைப்பற்றி, அவற்றை தடயவியல் ஆய்வுக்காக நிபுணர்கள் அனுப்பி வைத்துள்ளனர். கியாஸ் சிலிண்டர்கள் வெடிக்காததால் பெரும் அசம்பாவிதம் நடைபெறுவது தவிர்க்கப்பட்டு இருப்பதாகவும், கியாஸ் சிலிண்டர்கள் வெடித்திருந்தால் குடியிருப்பில் உள்ள மற்ற பல வீடுகளும் பாதிக்கப்பட்டு பலர் உயிர் இழந்திருக்க நேரிட்டு இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் எந்த விதமான பாதுகாப்பு வசதிகளும் இல்லை என்பதும் தெரியவந்தது. இதுபோன்ற அடுக்குமாடி குடியிருப்பில் ஒவ்வொரு தளத்திலும் தீயை அணைக்கும் சிறிய கருவிகளும், ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், அதுபற்றி தெரிவிக்க எச்சரிக்கை மணி அமைத்திருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை என்றும், முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாததாலும் பெரிய அளவில் தீப்பிடித்து 2 பேர் பலியாக நேரிட்டது தெரியவந்துள்ளது.
Related Tags :
Next Story