மைசூரு வணிக வரித்துறை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
மைசூரு வணிக வரி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மைசூரு:மைசூரு வணிக வரி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தொலைபேசி தகவல்
மைசூருவில் உள்ள பிடாரம் கிருஷ்ணப்பா ரோட்டில் வணிக வரித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதில் அதிகாரிகள் உள்பட சுமார் 80 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அந்த அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக அப்பகுதியில் உள்ள தேவராஜா போலீஸ் நிலையத்துக்கு ஒரு மர்ம நபர் செல்போன் மூலம் பேசி மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், அந்த வெடிகுண்டு காலை 11.30 முதல் மதியம் 1 மணிக்குள் வெடித்து சிதறும்படி ‘டைமர் செட்‘ செய்யப்பட்டு உள்ளதாகவும் அந்த நபர் தெரிவித்துள்ளார். இதை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
அனுமதி
உடனடியாக கிருஷ்ணப்பா ரோட்டில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்துக்கு போலீசார் சென்றனர். அங்கு பணியில் இருந்த வணிக வரித் துறை கமிஷனர் மஞ்சுநாத்தை உடனடியாக சந்தித்து வெடிகுண்டு மிரட்டல் பற்றிய தகவலை தெரிவித்தனர். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் தங்களுக்கு அப்படிப்பட்ட மிரட்டல் எதுவும் வரவில்லை என்று தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் அந்த அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.
அதுபோல் வெடிகுண்டு நிபுணர்களும் மோப்ப நாயுடன் அங்கு விரைந்து வந்து ஒவ்வொரு அறையாக சென்று சல்லடை போட்டு சோதனை மேற்கொண்டனர். முன்னதாக வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து அங்கு பணியாற்றிய ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
புரளி
அந்த இடத்துக்கு வந்த துணை போலீஸ் கமிஷனர் பிரதீப் குந்தே சோதனையை விரைவாக மேற்கொள்ள உத்தரவிட்டார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அங்கு தீவிர சோதனை நடந்தது. இருப்பினும் சோதனையில் வெடிகுண்டு இருப்பதற்கான அறிகுறிகள் எதுவுமே போலீசாருக்கு கிடைக்கவில்லை.
அந்த அலுவலக வளாகத்தில் இருந்த இதர கட்டிடங்களிலும் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் துணையுடன் பரிசோதனை நடத்திய நிலையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அதன் பின்னரே போலீசாருக்கு அது வெறும் புரளி என்று தெரிய வந்தது. அதனால் போலீசார் உள்பட வணிக வரித் துறை அதிகாரிகள் நிம்மதி அடைந்தனர்.
மர்மநபருக்கு வலைவீச்சு
இதுதொடர்பாக தேவராஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் பற்றி தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவாக இருக்கும் அவரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.
Related Tags :
Next Story