கழுமலையாறு பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு


கழுமலையாறு பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 23 Sept 2021 5:20 PM IST (Updated: 23 Sept 2021 5:20 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி செய்தி எதிரொலியாக கழுமலையாறு பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

சீர்காழி;
தினத்தந்தி செய்தி எதிரொலியாக கழுமலையாறு பாசன வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 
பாசன வாய்க்கால்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் கழுமலையாறு பாசன வாய்க்கால், புது மண்ணியாறு பாசன வாய்க்கால், ராஜன்வாய்க்கால், பொறை வாய்க்கால், ஊசி வாய்க்கால் உள்ளிட்ட முக்கிய வாய்க்கால்கள் உள்ளன. இந்த பாசன வாய்க்காலை நம்பி கொண்டல், வள்ளுவக்குடி, அகனி, நிம்மேலி, விளந்திடசமுத்திரம், சட்டநாதபுரம், திட்டை, செம்மங்குடி, கடவாசல், வடகால், அத்தியூர், மாதானம், தாண்டவன்குளம், கதிராமங்கலம், நத்தம், திருநன்றியூர், ஆதமங்கலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. 
இந்தநிலையில் தமிழக அரசு கடந்த ஜூன் 12&ந் தேதி மேட்டூர் அணையில் குறுவை சாகுபடி செய்வதற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. தண்ணீர் திறந்து விடப்பட்டு 3 மாதங்களுக்கு மேலாகியும் இதுநாள் வரை காவிரி கடைமடை பகுதியான சீர்காழி, திருவெண்காடு, கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை. 
விவசாயிகள் மகிழ்ச்சி
இதனால் குறுவை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்நிலையில் காவிரி நீர் வராததால் தற்போது காவிரி கடைமடை பகுதியில் உள்ள விவசாயிகள் சம்பா சாகுபடி செய்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அனைத்து பாசன வாய்க்கால்களும் தண்ணீர் திறந்துவிட வேண்டும். இல்லை என்றால் இந்த ஆண்டு சம்பா சாகுபடி  கேள்விக்குறியாகிவிடும் என விவசாயிகள் வேதனையோடு தெரிவித்தனர். 
இது குறித்த செய்தி கடந்த 17ந் தேதி தினத்தந்தி நாளிதழில் வெளியானது. இதைத்தொடர்ந்து சீர்காழி பகுதியில் உள்ள கழுமலையாறு பொறைவாய்க்கால், ராஜன் வாய்க்கால், புது மண்ணியாறு உள்ளிட்ட பாசன வாய்க்கால்களில் சம்பா சாகுபடி செய்வதற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதைத்தொடர்ந்து சம்பா சாகுபடி பணியை தொடங்க விவசாயிகள் ஆயத்தமாகி வருகின்றன. பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பதற்கு காரணமாக இருந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளையும், இது குறித்து செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் விவசாயிகள் நன்றி தெரிவித்து உள்ளனர்.

Next Story