பொதுமக்கள் திடீர் சாலைமறியலில்


பொதுமக்கள் திடீர் சாலைமறியலில்
x

திருப்பூர் சாமுண்டிபுரத்தில் குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

அனுப்பர்பாளையம்
திருப்பூர் சாமுண்டிபுரத்தில் குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர்
திருப்பூர் மாநகராட்சி 12வது வார்டு மாரியம்மன்கோவில் வீதி, ராஜீவ்நகர், வடிவேல்நகர், ஏ.வி.எம்.நகர், மகாசக்திநகர் பி.வி.ஜி.நகர் உள்பட சுற்று வட்டாரத்தில் 1000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில மாதங்களாக அந்த பகுதிக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை வினியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை மனு கொடுத்தும்  குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை.
 இதனால் கடந்த 12ந்தேதி அப்பகுதி மக்கள் சாமுண்டிபுரத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் 7 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். ஆனால் தற்போது அதிகாரிகள் கூறிய வாக்குறுதியை நிறைவேற்றாமல் மீண்டும் 10 நாட்களுக்கு மேலாகியும் அந்த பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. 
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த சுற்று வட்டாரத்தை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் கவுன்சிலர் ரவிச்சந்திரன் தலைமையில் நேற்று காலை மீண்டும் சாமுண்டிபுரம் பஸ் நிறுத்தம் அருகே சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி 1வது மண்டல உதவி கமிஷனர் சுப்பிரமணியம், 15 வேலம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். 
அப்போது இனி வரும் நாட்களில் 8 நாட்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதை தொடர்ந்து மறியலை கைவிட்ட பொதுமக்கள் 8 நாளில் குடிநீர் வரவில்லை என்றால் 9வது நாள் இதே இடத்தில் மீண்டும் சாலைமறியல் போராட்டம் நடைபெறும் என்று திட்டவட்டமாக அதிகாரிகளிடம் கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 2 மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டம் காரணமாக அங்கு போக்குவரத்து தடைபட்டது.


Next Story