செம்பரம்பாக்கம் ஏரியில் தொழிற்சாலை கழிவுகள் கலக்கிறதா? ஆய்வறிக்கை தாக்கல் செய்ய பசுமை தீர்ப்பாயம் இறுதிக்கெடு


செம்பரம்பாக்கம் ஏரியில் தொழிற்சாலை கழிவுகள் கலக்கிறதா? ஆய்வறிக்கை தாக்கல் செய்ய பசுமை தீர்ப்பாயம் இறுதிக்கெடு
x
தினத்தந்தி 23 Sept 2021 5:52 PM IST (Updated: 23 Sept 2021 5:52 PM IST)
t-max-icont-min-icon

செம்பரம்பாக்கம் ஏரியில் தொழிற்சாலை கழிவுகள் கலந்துள்ளதா என்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.

சென்னை, 

சென்னையை அடுத்த செம்பரம்பாக்கம் ஏரியில் குப்பைகள் கொட்டப்படுவதாகவும், தொழிற்சாலை கழிவுகள் கலப்பதாகவும் வந்த புகாரை விசாரித்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், இதுகுறித்து ஆய்வு செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரிய மூத்த அதிகாரி, பொதுப்பணித்துறை கண்காணிப்பு என்ஜினீயர், தொழில்துறை மூத்த அதிகாரி ஆகியோரை கொண்ட நிபுணர் குழுவை அமைத்து உத்தரவிட்டது.

செம்பரம்பாக்கம் ஏரி மாசுபடுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஏரியில் படிந்துள்ள மண்ணைச் சேகரித்து அதில் தொழிற்சாலை கழிவுகள் கலந்துள்ளதா என்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் அந்த மனு நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

முடிவில் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில், ‘கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடரப்பட்ட இந்த வழக்கில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மட்டும் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. ஏரியில் மாசு ஏற்படுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நிபுணர் குழுவோ, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளோ ஒரு அறிக்கைகூட தாக்கல் செய்யவில்லை. பலமுறை வாய்ப்பு வழங்கியும் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. அடுத்த மாதம் (அக்டோபர்) 8-ந் தேதிக்குள் ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இல்லாதபட்சத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

Next Story