இடி, மின்னலுடன் பலத்த மழை: சென்னையில் விமான சேவை பாதிப்பு - 2 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன


இடி, மின்னலுடன் பலத்த மழை: சென்னையில் விமான சேவை பாதிப்பு - 2 விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன
x
தினத்தந்தி 23 Sept 2021 6:09 PM IST (Updated: 23 Sept 2021 6:09 PM IST)
t-max-icont-min-icon

இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழையால் சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டன. கத்தார் மற்றும் துபாய் விமானங்கள் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டன.

ஆலந்தூர்,

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்து நேற்று அதிகாலை வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

கத்தாா் நாட்டு தலைநகா் தோகாவில் இருந்து அதிகாலை 2.20 மணிக்கு 147 பயணிகளுடன் வந்த விமானம், பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்து கொண்டு இருந்ததால் சென்னையில் தரை இறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. துபாயில் இருந்து 133 பயணிகளுடன் அதிகாலை 2.40 மணிக்கு வந்த விமானமும், சென்னையில் தரை இறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்டது.

அதேபோல் அதிகாலை 3.10 மணிக்கு துபாயில் இருந்து வந்த விமானம், அதிகாலை 3.25 மணிக்கு கொழும்பில் இருந்து வந்த விமானம் ஆகியவை சென்னையில் தரை இறங்க முடியாமல் நீண்டநேரமாக வானில் வட்டமடித்தபடி பறந்து கொண்டிருந் தன. சென்னையில் வானிலை சீரானதும் அந்த விமானங்கள் தரை இறங்கின.

சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சிங்கப்பூா், துபாய், சாா்ஜா, தோகா, குவைத், ஹாங்காங், கொழும்பு உள்ளிட்ட 9 பன்னாட்டு விமானங்கள் சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக புறப்பட்டு சென்றன. அதிகாலை 3 மணிக்கு பிறகு மழை ஓய்ந்ததும் பெங்களூருக்கு திருப்பிவிடப்பட்ட 2 விமானங்களும் மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்தன.

சென்னையில் நள்ளிரவில் பெய்த திடீா் மழையால் சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனா்.

Next Story