பழமையான ஓடுதளத்தில் விமானப்படை வீரர்கள் பயிற்சி
கயத்தாறு அருகே 2-ம் உலகப்போரின்போது பயன்படுத்தப்பட்ட பழமையான ஓடுதளத்தில் விமானப்படை வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி:
கயத்தாறு அருகே 2-ம் உலகப்போரின்போது பயன்படுத்தப்பட்ட பழமையான ஓடுதளத்தில் விமானப்படை வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
விமான தளம்
ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் 2&ம் உலகப்போரின்போது, தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறை அடுத்த பன்னீர்குளம் கிராமம் அருகே கடந்த 1936-ம் ஆண்டு 2 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட விமான தளம் அமைக்கப்பட்டது.
கயத்தாறு, கடம்பூர் ஆகிய ஊர்களுக்கு இடையே இந்த விமான தளம் அமைந்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், இந்த விமான தளம் பயனின்றி போனது. பிரமாண்டமான இந்த விமான தளத்தில் ஒரே நேரத்தில் 2 விமானங்கள் வந்து இறங்கியதாகவும், இதேபோல் 2 விமானங்கள் ஒரே நேரத்தில் புறப்பட்டுச் சென்றதாகவும் அந்த பகுதியை சேர்ந்த பெரியவர்கள் தெரிவித்து வருகின்றனர். இதற்காக விமான ஓடுதளம் மட்டும் சுமார் 60 ஏக்கரில் அமைந்துள்ளது. 5 அடி ஆழத்துக்கு ஓடு பாதையை ஆங்கிலேயர்கள் அமைத்து உள்ளனர்.
சுமார் 75 ஆண்டுகள் ஆகியும் இந்த ஓடுதளம் எந்தவித சேதாரமும் இல்லாமல் பயன்படுத்தும் வகையில் உள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு 2 முறை விமான படையைச் சேர்ந்த விமானம் இந்த விமான தளத்துக்கு வந்து இறங்கியது. தொடர்ந்து அந்த பகுதியில் விமானப்படைத்தளம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.
பயிற்சி
இந்த நிலையில் தஞ்சை விமானப்படை தளத்தை சேர்ந்த 59 விமானப்படை வீரர்கள், கமாண்டர் பிலிப் தலைமையில், பயிற்சிக்காக பன்னீர்குளம் விமான தளத்துக்கு வந்துள்ளனர். இவர்கள் விமானப்படையில் ராடார் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் விமானங்கள் வரும்போது ராடார் மூலம் எவ்வாறு கண்டறிவது? என்பது குறித்தும், அடிப்படை பயிற்சிகள் மேற்கொள்வதாகவும் இங்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்த பயிற்சி வருகிற 4&ந்தேதி வரை நடக்கிறது. இதனால் பயிற்சி நடைபெறும் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
தற்போது இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை தொடர்ந்து தமிழக கடற்கரையோர பகுதியை பாதுகாப்பதில் இந்திய அரசு அக்கறை காட்டி வருகிறது. இதற்காக ராணுவ விமானங்கள் இறங்குவதற்கான சாலையையும் அமைப்பதற்கான பணிகளை தொடங்கி உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் விமானப்படையை சேர்ந்த ராடார் சிக்னல் குழுவினர், தூத்துக்குடி மாவட்டத்தில் பயிற்சியில் ஈடுபட்டு இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Related Tags :
Next Story