வழிமறித்து லாரிகளின் கண்ணாடிகள் உடைப்பு- 2 பேருக்கு அரிவாள் வெட்டு - வாலிபர் கைது


வழிமறித்து லாரிகளின் கண்ணாடிகள் உடைப்பு- 2 பேருக்கு அரிவாள் வெட்டு - வாலிபர் கைது
x
தினத்தந்தி 23 Sept 2021 9:50 PM IST (Updated: 23 Sept 2021 9:50 PM IST)
t-max-icont-min-icon

கொரடாச்சேரி அருகே வழிமறித்து லாரி கண்ணாடிகளை உடைத்து, 2 பேரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக 4 பேரை வலை வீசி தேடி வருகிறார்கள். இதுபற்றிய விவரம் வருமாறு:-

கொரடாச்சேரி,

திருவாரூர் அருகே நடப்பூரை சேர்ந்தவர் குமரவேல் (வயது 34). இவரும், இவருடைய நண்பர் கனிவண்ணன் என்பவரும் தனித்தனியாக தஞ்சையை அடுத்த வல்லம் நோக்கி லாரிகளை ஓட்டி சென்று கொண்டிருந்தனர். கொரடாச்சேரி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அம்மையப்பனில் இருந்து திருக்கண்ணமங்கை செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சென்றபோது, வடகரையை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் குமரவேல் ஓட்டி சென்ற லாரியை வழி மறித்தார். இதனால் லாரியை நிறுத்திய குமரவேல், ஏன் லாரியை நிறுத்துகிறாய்? என கேட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த ஹரிஹரன் அருகில் இருந்த ஒரு பாட்டிலை எடுத்து வீசி லாரியின் ஒரு பக்க கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பி ஓடினார். அப்போது குமரவேல் நண்பர் ஓட்டி வந்த லாரியும் அங்கு வந்து சேர்ந்தது. இதையடுத்து குமரவேல், தப்பி ஓடிய ஹரிஹரனை பிடிக்க அருகில் இருந்தவர்களின் மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு சிறிது தூரம் விரட்டி சென்றார். ஆனால் ஹரிஹரனை பிடிக்க முடியவில்லை. இதையடுத்து ஹரிஹரன் மற்றும் அவரது நண்பர்கள் லாரிகள் நின்ற இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு லாரிகளின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். பின்னர் டீசல் டேங்கையும் சேதப்படுத்தினர்.

அப்போது அங்கு நின்றவர்களை திருக்கண்ணமங்கையை சேர்ந்த சிலம்பரசன் (29), குருநாதன் (32) ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் காயமடைந்த சிலம்பரசன் மற்றும் குருநாதன் ஆகியோர் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக லாரி டிரைவர் குமரவேல் கொடுத்த புகாரின்பேரில் கொரடாச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாராமன் மற்றும் போலீசார், வடகரையை சேர்ந்த ஹரிஹரன், எண்கணையை சேர்ந்த அருண் பாண்டியன், பிரகாஷ், கவுதம், வேலவன் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, ஹரிஹரன் (24) என்பவரை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக 4 பேரை வலை வீசி தேடி வருகிறார்கள்.

Next Story