புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெறக்கோரி அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெறக்கோரி அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Sept 2021 10:14 PM IST (Updated: 23 Sept 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெறக்கோரி அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் விழுப்புரம் மண்டலத்திற்குட்பட்ட 13 பணிமனைகளில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம், 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்ப பெறக்கோரியும், தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறை சட்டங்களை எதிர்த்தும், புதிய மோட்டார் வாகன சட்டத்தினை திரும்ப பெறக்கோரியும், பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றத்தை குறைத்திட வலியுறுத்தியும், லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களான ரெயில்வே, விமானம், பெட்ரோலிய நிறுவனங்கள், இரும்பு, நிலக்கரி சுரங்கங்கள், வங்கிகளை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார்த்து கொடுப்பதை கண்டித்தும், இதற்காக வருகிற 27-ந் தேதியில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையிலும் நேற்று தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் மண்டலத்திற்குட்பட்ட அனைத்து பணிமனைகள் முன்பு தொ.மு.ச. உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

13 பணிமனைகளில் நடந்தது

விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை எண் 1, 2, 3 ஆகியவற்றின் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். தொ.மு.ச. பொதுச்செயலாளர் பிரபா தண்டபாணி, கோரிக்கைகளை வலியுறுத்தி விளக்கவுரையாற்றினார். இதில் சி.ஐ.டி.யு. தலைவர் மூர்த்தி, பொதுச்செயலாளர் ரகோத்தமன், ஐ.என்.டி.யூ.சி. பொதுச்செயலாளர் முருகானந்தம், அறிவர் அம்பேத்கர் தொழிற்சங்க பொதுச்செயலாளர் ராமச்சந்திரன், மறுமலர்ச்சி தொழிற்சங்க நிர்வாகி ரவி, தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் துணைத்தலைவர்கள் சந்திரசேகரன், பெருமாள், பிரச்சார செயலாளர் ரவிச்சந்திரன், துணை செயலாளர்கள் ராஜேந்திரன், மனோகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் தொ.மு.ச. அமைப்பு செயலாளர் வேலு நன்றி கூறினார்.

இதேபோல் செஞ்சி, திண்டிவனம், கள்ளக்குறிச்சி பணிமனை எண் 1, 2, உளுந்தூர்பேட்டை, சின்னசேலம், சங்கராபுரம், திருக்கோவிலூர், புதுச்சேரி, சென்னை கோயம்பேடு ஆகிய பணிமனைகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Next Story