தமிழ்நாட்டில் உரிய அனுமதியின்றி செயல்படும் குவாரிகள் மீது நடவடிக்கை-அமைச்சர் துரைமுருகன் தகவல்


தமிழ்நாட்டில் உரிய அனுமதியின்றி செயல்படும் குவாரிகள் மீது நடவடிக்கை-அமைச்சர் துரைமுருகன் தகவல்
x
தினத்தந்தி 23 Sept 2021 10:22 PM IST (Updated: 23 Sept 2021 10:22 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் உரிய அனுமதியின்றி செயல்படும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

கிருஷ்ணகிரி:
தமிழ்நாட்டில் உரிய அனுமதியின்றி செயல்படும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
ஆய்வு கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை தொடர்பான துறை சார்ந்த அனைத்து மாவட்ட அலுவலர்களின் பணிதிறன் குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்கினார். புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் நிர்மல்ராஜ், சேலம் தமிழ்நாடு மேக்னசைட் லிமிடெட் மேலாண்மை இயக்குனர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-
ரூ.428.62 கோடி வருவாய்
கடந்த 4 மாதங்களில் கனிம வருவாய் ரூ.428.62 கோடி ஈட்டப்பட்டுள்ளது. இனி வரும் மாதங்களில் கனிம வருவாயை அதிகரிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பக்கத்து மாநிலங்களுக்கு அனுமதியின்றி கனிமங்களை எடுத்து செல்லும் வாகனங்களை முற்றிலும் தடுக்க வேண்டும். கனிம திருட்டை முற்றிலும் தடுத்து, மாநில அரசுக்கு அதிகளவில் வருவாய் ஈட்டி தர வேண்டும்.
இதே போல் உரிய அனுமதி இல்லாமல் செயல்படும் குவாரிகளை கண்டறிந்து உடனுக்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பல்வேறு நீதிமன்ற வழக்குகளில் வழங்கப்பட்ட, நீதிமன்ற ஆணைகள்படி நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும். சட்டவிரோதமாக கனிமங்களை வெட்டி எடுப்பது தொடர்பாக, பெறப்படும் புகார்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்வதுடன் இப்பகுதிகளை களஆய்வு மேற்கொண்டு, தேவைப்படின், ஆளில்லா விமான தொழில்நுட்பத்தின் மூலம் அளவீடு செய்து தொடர்புடைய நபர்கள் மீது விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புவியியல் மற்றும் சுரங்க துறையை மேம்படுத்தும் நோக்கில் அரசுக்கு கூடுதல் வருவாயை ஈட்டித்தர அனைத்து அலுவலர்களும் முழு ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும். 
இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
ஆய்வு
முன்னதாக, பர்கூரில் தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்கு சொந்தமான கிரானைட் ஓடுகள் மெருகேற்றும் தொழிற்சாலை செயல்பாடுகளை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்தார். 
அப்போது அவர் கூறியதாவது:-
கிரானைட் குவாரிகளில் உற்பத்தியை அதிகரித்து கூடுதல் வருவாய் ஈட்டி அரசுக்கு வருவாயை அதிகரிக்கவும், லாபகரமாக சந்தைப்படுத்தவும் முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும். கிருஷ்ணகிரி கோட்டத்திற்கு உட்பட்ட அஜ்ஜனஹள்ளி கருப்புக்கல் கிரானைட் குவாரி, செந்தாரப்பள்ளி மற்றும் தட்ரஹள்ளி பல வண்ண கிரானைட் குவாரிகளை லாபகரமாக செயல்படுத்த வேண்டும்.
தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனத்தில் செயல்படாமல் இருக்கும் மற்றொரு தொழிற்சாலையை சுற்றுச்சூழல் அனுமதி பெற்று விரைவில் செயல்படுத்தப்படும். டி.பி.எம். மேக்னசைட்டை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்த ரூ.40 லட்சம் செலவில் கருவிகளும், டியுனைட் கனிமத்தை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்த ரூ.25 லட்சம் செலவில் கருவிகளும் நிறுவப்பட உள்ளன.
லாபம் ஈட்ட திட்டம்
இவை வருகிற 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், இந்த நிதியாண்டில், ரூ.15.63 கோடி அரசுக்கு லாபம் ஈட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி, போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி, பர்கூர் மதியழகன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. செங்குட்டுவன், முன்னாள் எம்.பி.க்கள் வெற்றிச்செல்வன், சுகவனம், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், உதவி கலெக்டர் சதீஷ்குமார், தமிழ்நாடு கனிம நிறுவன பொது மேலாளர் ஹென்றி ராபர்ட், பொது மேலாளர் (பொறுப்பு) சந்தானம், உதவி பொது மேலாளர் (உற்பத்தி) கணேசன், துணை மேலாளர் (சுரங்க குத்தகை) ஜவகர், தொழிலக மேலாளர் ரவீந்திரன், பர்கூர் ஒன்றியக்குழு தலைவர் கவிதா கோவிந்தராசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Next Story