ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தாக்கல் செய்த ஒரு வேட்புமனுவும் தள்ளுபடி


ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு தாக்கல் செய்த ஒரு வேட்புமனுவும் தள்ளுபடி
x
தினத்தந்தி 23 Sept 2021 11:08 PM IST (Updated: 23 Sept 2021 11:08 PM IST)
t-max-icont-min-icon

தட்டப்பாறை ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த ஒரு வேட்பு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

குடியாத்தம்

தட்டப்பாறை ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த ஒரு வேட்பு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

எஸ்.டி. பெண்களுக்கு ஒதுக்கீடு

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் 3 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், 31 ஒன்றிய குழு உறுப்பினர், 50 ஊராட்சி மன்ற தலைவர்கள், 426 ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதற்காக 1,729 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் தட்டப்பாறை ஊராட்சி தலைவர் பதவி எஸ்.டி. பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால் தட்டப்பாறை ஊராட்சியில் எஸ்.டி. பிரிவினர் யாரும் வசிக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே தட்டப்பாறை ஊராட்சி தலைவர் பதவி எஸ்.டி. பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதை ரத்து செய்து பொதுப்பிரிவுக்கு மாற்ற வேண்டும் என தட்டப்பாறை கிராம மக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்திருந்தனர். இதுகுறித்து குடியாத்தம் உதவி கலெக்டர் விசாரணை செய்து கலெக்டருக்கு அறிக்கை அனுப்பி இருந்தார்.

ஒரு மனுவும் தள்ளுபடி

இந்தநிலையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று முன்தினம் மாலை தட்டப்பாறை ஊராட்சி தலைவர் பதவிக்கு வெள்ளேரி கிராமத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரின் மனைவி கமலவேணி (வயது 29) என்பவர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தார். வேறுயாரும் மனுதாக்கல் செய்யவில்லை. 

நேற்று காலையில் தட்டப்பாறை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஊராட்சி உதவிதேர்தல் நடத்தும் அதிகாரி தமிழ்வாணன் மற்றும் அதிகாரிகளிடம் தட்டப்பாறை ஊராட்சியில் எஸ்.டி. பெண்கள் வசிக்கவில்லை. தலைவர் பதவிக்கு தாக்கல் செய்துள்ள மனு மீது தீவிர விசாரணை நடத்த வேண்டும் என மனு அளித்தனர்.
நேற்று மாலையில் வேட்பு மனு பரிசீலனை நடந்தது. அப்போது தட்டப்பாறை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு வேட்புமனு செய்திருந்த கமலவேணியின் வேட்புமனுவில் உரிய ஆவணங்கள் இணைக்கப்படாததால் அவருடைய வேட்பு மனு தள்ளுபடி செய்யப்படுவதாக  உதவி தேர்தல் அதிகாரி தமிழ்வாணன் அறிவித்தார்.
இதனால் தட்டப்பாறை ஊராட்சி மன்ற தலைவருக்கான தேர்தல் நடைபெறாது என்றும், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினருக்கான தேர்தல் வழக்கம்போல் நடைபெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story