இறைச்சி கழிவுகளை கொட்டிய நபர்கள் மீது நடவடிக்கை
தேனியில் நோய் பரப்பும் வகையில், இறைச்சி கழிவுகளை கொட்டிய நபர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார்.
தேனி:
தேனி கே.ஆர்.ஆர். நகரில் மாவட்ட வன அலுவலர் அலுவலகம் அருகில் சிலர் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டி செல்கின்றனர். இதனால், அங்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதோடு, தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டருக்கு புகார் சென்றது. அதன்பேரில் கலெக்டர் முரளிதரன் நேற்று அந்த பகுதிக்கு நேரில் வந்து திடீர் ஆய்வு செய்தார்.
இறைச்சிக் கழிவுகளை கொட்டியது யார்? என நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது யார் கொட்டியது என தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இறைச்சி கழிவுகளை கொட்டிய நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அங்கு கொட்டப்பட்ட கழிவுகளை முழுமையாக அகற்றிவிட்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கலெக்டர் உத்தரவிட்டார்.
பின்னர், தேனி அல்லிநகரம், போடி நகராட்சி பகுதிகளில் மெகா மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து போடி ஒன்றியம் சில்லமரத்துப்பட்டி, போ.அம்மாபட்டி, டொம்புச்சேரி, காமராஜபுரம் ஆகிய பகுதிகளில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் போடி தாலுகா அலுவலகம் மற்றும் போடி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளிலும் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட வன அலுவலர் வித்யா, மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த், மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, நகராட்சி ஆணையாளர்கள் சுப்பையா, ஷகிலா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story