தேவாரத்தில் ரூ.1 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம்


தேவாரத்தில் ரூ.1 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம்
x
தினத்தந்தி 23 Sept 2021 11:20 PM IST (Updated: 23 Sept 2021 11:20 PM IST)
t-max-icont-min-icon

தேவாரத்தில் ரூ.1 கோடி மதிப்பில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ளது.

தேவாரம்:

தேவாரம் பஸ் நிலையத்துக்கு தினமும் 50&க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. அங்கிருந்து போடி, உத்தமபாளையம், கம்பம், மதுரை, கோவைக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்த பஸ் நிலையத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

இதனையடுத்து தேவாரத்தில் நவீன முறையில் புதிதாக பஸ் நிலையம் கட்டுவதற்கு திட்ட மதிப்பீடு தயாரிக்க பேரூராட்சி நிர்வாகத்துக்கு கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார்.

அதன்பேரில் பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் ராஜாராம் தலைமையில், பேரூராட்சி செயல் அலுவலர் குலோத்துங்கன் மற்றும் அதிகாரிகள் குழுவினர் தேவாரம் பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

 பின்னர் அதிகாரிகள் கூறுகையில், தேவாரத்தில் தற்போது உள்ள பஸ் நிலையம் இடிக்கப்பட்டு புதிதாக பஸ் நிலையம் கட்டப்பட உள்ளது. பஸ் நிலையம் முற்றிலும் நவீன முறையில் வடிவமைக்கப்பட உள்ளது. ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக சுகாதார வளாகம் அமைக்கப்பட உள்ளது.-

  பயணிகள் அமர்வதற்கு தனித்தனியாக இருக்கை வசதி செய்து கொடுக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் சிரமம் இன்றி சென்று வருவதற்கு சாய்வு தள வசதி ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக, ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க இருக்கிறோம் என்றனர்.

Next Story