திருச்சி போலீஸ் ஐ.ஜி. அலுவலகம் அருகே 2 முதியவர்கள் தீக்குளிக்க முயற்சி


திருச்சி போலீஸ் ஐ.ஜி. அலுவலகம் அருகே 2 முதியவர்கள் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 24 Sept 2021 2:18 AM IST (Updated: 24 Sept 2021 2:18 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்ட போலீசாரை கண்டித்து திருச்சி போலீஸ் ஐ.ஜி. அலுவலகம் அருகே 2 முதியவர்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கே.கே.நகர்
பெரம்பலூர் மாவட்டம், துறைமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்செட்டியார் (வயது 71). இவருடைய உறவினர் சிவநடராஜன் (60). நேற்று காலை இவர்கள் 2 பேரும் திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் அருகே மத்திய மண்டல ஐ.ஜி. அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு கையில் கட்டைப்பையுடன் வந்தனர். பின்னர் அவர்கள், ஐ.ஜி. அலுவலகத்தை கடந்து அதன் எதிர்புறம் உள்ள வணிக வளாக பகுதிக்கு சென்றனர். அங்கு சாலையோரம் நின்றுகொண்டு, கட்டை பையில் கேனில் கொண்டு வந்த மண்எண்ணெயை எடுத்து இருவரும் உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். இதனை பார்த்ததும், அந்த பகுதியில் பாதுகாப்புக்கு நின்ற போலீசார் ஓடிவந்து, அவர்களை தடுத்து நிறுத்தி, அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  இதுகுறித்து அவர்களிடம் கேட்டபோது வட்டிக்கு பணம் வாங்கிய விவகாரத்தில் நிலத்தை திருப்பி தராத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கொடுத்த புகார் மீது கடந்த 2 ஆண்டுகளாக பெரம்பலூர் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் போலீசாரை கண்டித்து தீக்குளிக்க முயன்றதாக கூறினர். அதனைத் தொடர்ந்து போலீசார், அவர்கள் இருவரையும் ஜீப்பில் ஏற்றி கே.கே.நகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.



Next Story