வீட்டின் மேற்கூரை இடிந்து குழந்தை பலி: கல்குவாரியில் வெடி வைத்தவர் மீது வழக்கு
வீட்டின் மேற்கூரை இடிந்து குழந்தை பலியான சம்பவம் தொடர்பாக கல்குவாரியில் வெடி வைத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
ராதாபுரம்:
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே சீலாத்திகுளத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 28). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் காலையில் முருகன் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் அவருடைய மனைவி சுகன்யா, மகள் கன்னித்தாய், மகன் ஆகாஷ் (3) ஆகியோர் இருந்தனர். அப்போது திடீரென்று பயங்கர சத்தத்துடன் முருகன் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் குழந்தை ஆகாஷ் சம்பவ இடத்திலேயே பலியானது. இதுபற்றி தகவல் அறிந்ததும் ராதாபுரம் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
ஆகாஷ் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முயன்றபோது பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் கூறும்போது, இந்த பகுதியில் உள்ள கல்குவாரிகளில் வெடி வைத்து தகர்க்கும்போது வீடுகளில் அதிர்வு ஏற்படுகிறது. இதேபோல் வெடிவைத்தபோது முருகன் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து ஆகாஷ் பலியாகி உள்ளான். எனவே கல்குவாரிகளை மூட வேண்டும் என்று கூறினர்.
பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதுதொடர்பாக ராதாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கல்குவாரியில் பாறைகளை உடைப்பதற்காக வெடி வைத்தவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story