நாட்டில் அனைத்து கிராமங்களுக்கும் டிஜிட்டல் தொடர்பு வசதிகள்; மத்திய மந்திரி கிரிராஜ்சிங் தகவல்


நாட்டில் அனைத்து கிராமங்களுக்கும் டிஜிட்டல் தொடர்பு வசதிகள்; மத்திய மந்திரி கிரிராஜ்சிங் தகவல்
x
தினத்தந்தி 24 Sept 2021 2:25 AM IST (Updated: 24 Sept 2021 2:25 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் அனைத்து கிராமங்களுக்கும் வருகிற 2024-ம் ஆண்டுக்குள் டிஜிட்டல் தொடர்பு வசதியை பெற்றிருக்க வேண்டும் என்று மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.

பெங்களூரு: இந்தியாவில் அனைத்து கிராமங்களுக்கும் வருகிற 2024-ம் ஆண்டுக்குள் டிஜிட்டல் தொடர்பு வசதியை பெற்றிருக்க வேண்டும் என்று மத்திய மந்திரி கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.

கிராமங்களின் வளர்ச்சி

இந்திய குடியரசு பவள விழா கொண்டாட்டத்தையொட்டி, 750 கிராம பஞ்சாயத்துகளை மேம்படுத்தும் திட்டத்தை கர்நாடக அரசு ஏற்கனவே அறிவித்தது. அந்த திட்ட தொடக்க விழா பெங்களூரு விதான சவுதாவில் உள்ள விருந்தினர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய கிராமப்புற வளர்ச்சித்துறை மந்திரி கிரிராஜ்சிங் கலந்து கொண்டு, அந்த திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் முதல்&மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டார். இதில் மத்திய மந்திரி கிரிராஜ்சிங் பேசியதாவது:-

நாட்டில் வருகிற 2024&ம் ஆண்டுக்குள் அனைத்து கிராமங்களும் டிஜிட்டல் தொடர்பு வசதிகள் ஏற்படுத்தப்படும். அதற்கேற்ப இந்த திட்டத்தை மாநில அரசு தீவிரமான முறையில் அமல்படுத்த வேண்டும். வருகிற அக்டோபர் மாதம் 2&ந் தேதி காந்தி ஜெயந்தி அன்று, எனது கிராமம் எனது பரம்பரை என்ற முழக்கத்தின்படி கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும். இதில் கிராமங்களின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள், கல்வியாளர்கள், சுந்திர போராட்டக்காரர்களை நினைவுகூற வேண்டும்.

நாடு வலுவடையும்

வருகிற 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். கிராமங்கள் பலம் பெற்றால் நாடும் வலுவடையும். இந்த நோக்கத்தில் கிராமங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்கிறது. கர்நாடகத்திற்கு 14, 15-வது நிதி ஆணையம் ரூ.9,626 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. கிராம சுவராஜ்ஜிய திட்டத்தின் கீழ் கடந்த 2014-ம் ஆண்டு முதல் இதுவரை ரூ.135 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கிரிராஜ்சிங் பேசினார்.

அதைத்தொடர்ந்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:&
கிராம பஞ்சாயத்துகள் மக்களுக்கு சேவைகளை வழங்கும் சேவை அமைப்பாக இருக்க வேண்டும். அரசின் திட்ட பயன்கள் மக்களின் வீட்டு வாசலுக்கே சென்றடைய வேண்டும். இந்த நோக்கத்தில் கிராம சேவை திட்டம் அமல்படுத்தப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் தேவையான ஏற்பாடுகளை இப்போது இருந்தே செய்ய தொடங்க வேண்டும்.

ரூ.2,300 கோடி

கர்நாடகத்தில் முன்னாள் முதல்&மந்திரி ராமகிருஷ்ண ஹெக்டே, அப்போது கிராம வளர்ச்சித்துறை மந்திரியாக இருந்த அப்துல் நசீர்சாப் ஆகியோர் தான் சீரான முறையில் கிராம பஞ்சாயத்து அமைப்புகளை கட்டமைத்தனர். மக்களின் பங்கேற்பு இருந்தால் மட்டுமே ஜனநாயகம் வெற்றி பெறும். இன்று (நேற்று) தொடங்கப்பட்டுள்ள திட்டம் மூலம் 750 கிராம கிராம பஞ்சாயத்துகள் முழுமையாக மேம்படுத்தப்படும்.

இதற்காக அந்த 750 கிராம பஞ்சாயத்துகளுக்கு தலா ரூ.3 கோடி வீதம் 2, 300 கோடி நிதி ஒதுக்கப்படும். இந்த திட்ட பணிகளை வருகிற மார்ச் மாதத்திற்குள் முடிக்கும் கிராம பஞ்சாயத்துகளுக்கு ஊக்கத்தொகையாக தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும். அடுத்த ஆண்டு மேலும் 1, 500 கிராம பஞ்சாயத்துகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். பிரதமர் மோடியின் கனவு திட்டமான ஜலஜீவன் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது. இந்த திட்ட பணிகளை நிறைவேற்ற ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நடவடிக்கைகள்

சமூக, பொருளாதார, கல்வியில் கிராமங்கள் முன்னேற்றம் அடைந்தால், அங்குள்ள மக்களின் வாழ்க்கை தரம் மேம்படும். கிராமங்களில் பொருளாதார நடவடிக்கைகள் அதிகரிக்க வேண்டும். இது மகளிர் சுயஉதவி குழுக்கள், கூட்டுறவு சங்கங்களால் சாத்தியம்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
இந்த விழாவில் உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண், கூட்டுறவு மந்திரி எஸ்.டி.சோமசேகர், தோட்டக்கலை மந்திரி முனிரத்னா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story