தனஞ்செயா யானைக்கும் அம்பாரி சுமக்கும் பயிற்சி


தனஞ்செயா யானைக்கும் அம்பாரி சுமக்கும் பயிற்சி
x
தினத்தந்தி 24 Sept 2021 2:42 AM IST (Updated: 24 Sept 2021 2:42 AM IST)
t-max-icont-min-icon

மைசூரு தசரா விழாவையொட்டி தனஞ்செயா யானைக்கும் அம்பாரி சுமக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

மைசூரு: மைசூரு தசரா விழாவையொட்டி தனஞ்செயா யானைக்கும் அம்பாரி சுமக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. 

மைசூரு தசரா விழா

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ந்தேதி தொடங்கி 15-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு தசரா விழாவை எளிமையாக கொண்டாட மாநில அரசு முடிவு செய்துள்ளது. தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலம் கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் அரண்மனை வளாகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த தசரா விழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு முகாம்களில் இருந்து 8 யானைகள் மைசூருவுக்கு வந்துள்ளன. மைசூரு அரண்மனை வளாகத்தில் அந்த யானைகள் தங்க வைக்கப்பட்டுள்ளன. அரண்மனை வளாகத்தில் யானைகளுக்கு தினமும் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. 

அம்பாரி சுமக்கும் பயிற்சி

இந்த ஆண்டு நடக்கும் தசரா விழாவில் அபிமன்யு யானை தான் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமக்க உள்ளது. அதாவது, தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை ஒரு யானை சுமந்து கம்பீரமாக நடைபோட, அதற்கு பின்னால் மற்ற யானைகளும், அலங்கார அணிவகுப்பு வண்டிகளும் ஊர்வலமாக வரும். இதனை பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும். 

இதனால் அபிமன்யு யானைக்கு, மைசூரு அரண்மனை வளாகத்தில் வைத்து சுமார் 1,000 கிலோ எடைகொண்ட மணல் மூட்டைகளை சுமக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

தனஞ்செயாவுக்கும் பயிற்சி

ஒவ்வொரு ஆண்டு தசரா விழாவின்போதும் தங்க அம்பாரியை சுமக்கும் யானைக்கு துணையாக மற்றொரு யானைக்கும் பயிற்சி அளிக்கப்படும். அதாவது, ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது அம்பாரியை சுமக்கும் யானைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அந்த யானைக்கு பதிலாக மற்றொரு யானை மூலம் ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கும். இதனால், இந்த ஆண்டு அபிமன்யு யானையுடன் தனஞ்செயா யானைக்கும் அம்பாரி சுமக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

தனஞ்செயா யானையையும், ஆயிரம் கிலோ எடை கொண்ட மணல் மூட்டைகளை சுமக்க வைத்து பயிற்சி அளிக்கப்படுகிறது. நேற்று வழக்கம் போல அனைத்து யானைகளுக்கும் நடைபயிற்சி அளிக்கப்பட்டது. அபிமன்யு, தனஞ்செயா யானைகளுக்கு மணல் மூட்டைகளை சுமக்கும் பயிற்சி வழங்கப்பட்டது. 

Next Story