மோகனூர் அருகே ஆக்கிரமிப்பு வீடுகள் முழுவதும் இடித்து அகற்றம்
மோகனூர் அருகே ஆக்கிரமிப்பு வீடுகள் முழுவதும் இடித்து அகற்றம்
மோகனூர், செப்.24&
மோகனூர் அருகே அரசு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டிய வீடுகள் முழுவதும் இடித்து அகற்றப்பட்டன. இதையொட்டி நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
25 வீடுகள் இடிப்பு
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த மாடகாசம்பட்டி ஊராட்சி எம்.ராசாம்பாளையம் அருந்ததியர் காலனி அருகே அரசுக்கு சொந்தமான கல்லாங்குத்து புறம்போக்கு நிலம் உள்ளது. இங்கு அந்த பகுதியை சேர்ந்த 30&க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரசின் அனுமதி பெறாமல் குடிசை மற்றும் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இதுகுறித்து வந்த புகாரின்பேரில் ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவிட்டதன்பேரில், மோகனூர் தாசில்தார் தங்கராஜ் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் பொக்லைன் எந்திரங்களுடன் சென்று 2 வீடுகளை இடித்தனர்.
அப்போது பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். இந்தநிலையில் நேற்று காலை வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் 2 பொக்லைன் எந்திரங்களுடன் அந்த பகுதிக்கு சென்றனர். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரங்கள் மூலம் குடிசைகள், மாடி வீடுகள் என மொத்தம் 25 வீடுகள் இடித்து அகற்றப்பட்டது.
பெண் தற்கொலை முயற்சி
இதனை பார்த்து ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மீண்டும் வருவாய் துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த சமயம் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அய்யாவு மனைவி ராதா (வயது 39) என்பவர், திடீரென தனது வீட்டிற்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த அங்கு இருந்தவர்கள் வீட்டுக்குள் ஓடி சென்று அந்த பெண்ணை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நீண்ட பரபரப்புக்கு இடையே அந்த பகுதியில் உள்ள அனைத்து வீடுகளும் இடித்து அகற்றப்பட்டன.
இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் கொடுக்க புறப்பட்டு சென்றனர். வீடு இடிப்பு, பொதுமக்கள் வாக்குவாதம், பெண் தற்கொலை முயற்சி உள்ளிட்ட சம்பவங்களால் எம்.ராசாம்பாளையம் அருந்ததியர் தெருவில் கடந்த 2 நாட்களாக பரபரப்பாக காணப்பட்டது. மேலும் அசம்பாவிதங்களை தடுக்க மாவட்ட குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு சங்கர், மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காத்திருப்பு போராட்டம்
இதற்கிடையே ராசாம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலின் படியில் அமர்ந்திருந்த அவர்கள், வீடுகளை இடித்து பொருட்களை சேதப்படுத்தியதற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். வீடு இடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடு இல்லாதவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கி தர வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தை நடத்தினர்.
அவர்களிடம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரமேஷ், நாமக்கல் உதவி கலெக்டர் கோட்டைக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் தகுதியான நபர்களுக்கு மாற்று இடத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இருப்பினும் அதை ஏற்றுக்கொள்ளாத அவர்கள் இரவு வரை கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story