சைபர் குற்றங்கள் : நாட்டிலேயே பெங்களூரூ முதலிடம்
நாட்டில் 2020ல் நடைபெற்ற மொத்த சைபர் குற்றங்களில் 47 சதவீதம் பெங்களூரூவில் பதிவாகியுள்ளன
பெங்களூரூ:
2020ம் ஆண்டில் நாட்டின் 19 மெட்ரோ நகரங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள சைபர் குற்றங்களில், 47 சதவீதம் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரம் என்று அழைக்கப்படும் பெங்களூரூவில் பதிவாகியுள்ளதாக தேசிய குற்றப் பதிவுகள் அமைப்பின் தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.
நாட்டிலுள்ள 19 மெட்ரோ நகரங்களில் பதிவாகியுள்ள 18867 சைபர் குற்றங்களில் பெங்களூரூவில் மட்டும் 8892 சைபர் குற்றங்கள் குறித்த புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தபடியாக ஐதராபாத் நகரத்தில் 2553 சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளன. அவற்றை தொடர்ந்து மும்பையில் 2433, லக்னோவில் 1465, காசியாபாத்தில் 756 மற்றும் டில்லியில் 166 சைபர் குற்றங்கள் குறித்த புகார்கள் பதிவாகியுள்ளன.
2019 ம் ஆண்டில் பெங்களூரூவில் 10555 சைபர் குற்றங்கள் பதிவாகியிருந்தன. அதை விட 2020ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை சிறிதளவு குறைந்துள்ளது.
நாட்டிலுள்ள 19 மெட்ரோ நகரங்களில் 2019ல் மொத்தம் 18500 குற்றங்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஆண்டு நாடு தழுவிய பொதுமுடக்கம் அமலில் இருந்த போது, பெரும்பாலானோர் இணையவழி பணப் பரிமாற்றத்தை பயன்படுத்தி வந்தனர்.எனினும், கடந்த ஆண்டு, பெங்களூரூ நகரில் பதிவு செய்யப்பட்ட சைபர் குற்றங்கள் 2019ம் ஆண்டைக் காட்டிலும் குறைவே. இதற்கு காரணம், இணையவழிப் பயன்பாட்டாளர்களிடம் உள்ள விழிப்புணர்வே ஆகும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சைபர் குற்றங்கள் குறித்து புகார் பதிவு செய்யப்பட்டவுடன் பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகள் உடனே முடக்கப்படும். ஆனால் அதற்கு, குற்றம் நடைபெற்ற 2 மணி நேரத்துக்குள் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் குறித்த புகாரை பதிவு செய்திருக்க வேண்டும். இதற்காக பொதுமக்கள் காவல் நிலையம் வர தேவையில்லை, 112 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு குற்றம் குறித்த புகாரை பதிவு செய்யலாம். தங்களுடைய அடையாளத்தை திருடிவிட்டதாக பெறப்படும் சைபர் புகார்கள் மிக அதிக அளவில் உள்ளன. மற்ற நகரங்களை விட பெங்களூரூவில் தான் இந்த வகையான குற்றங்கள் அதிகமாக புகார் அளிக்கப்பட்டுள்ளன.
Related Tags :
Next Story