வள்ளியூர் யூனியன் அலுவலகத்தை வேட்பாளர் ஆதரவாளர்களுடன் முற்றுகை
வள்ளியூர் யூனியன் அலுவலகத்தை ஆதரவாளர்களுடன் வேட்பாளர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.
வள்ளியூர்:
ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, வள்ளியூர் யூனியன் திருமலாபுரம் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு கலை சுமிதா, பவானி, இந்திரா, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் குணசேகரன் மனைவி இந்திரா ஆகிய 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை, வள்ளியூர் யூனியன் அலுவலகத்தில் நடந்தது. அப்போது பவானி மளிகை கடை நடத்தியதற்கான தொழில் வரி செலுத்தவில்லை எனவும், எனவே அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், இந்திரா உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் தெரிவித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பவானி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வள்ளியூர் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள், இந்திரா தன் மீதான குற்ற வழக்குகளை வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை என்பதால், அவரது வேட்புமனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முறையிட்டனர். அவர்களிடம் வள்ளியூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு சமய்சிங் மீனா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கும்படியும், கோர்ட்டு மூலம் தீர்வு காணுமாறும் அறிவுறுத்தினார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். பின்னர் பவானியின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story