நெற்குன்றத்தில் ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகளை அகற்ற எதிர்ப்பு; 2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி
நெற்குன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை க்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள்,வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றனர்.
மேலும் ஒரு பெண், மாடியில் இருந்து போலீசார் மீது மண்எண்ணெய் ஊற்றி எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆக்கிரமிப்பு
சென்னை நெற்குன்றத்தில் மதுரவாயல்-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இந்து சமய அறநிலையத்துக்கு சொந்தமான மதுரவாயல் மார்க்சகாய ஈஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.23 கோடி மதிப்புள்ள இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து 50-க்கும் மேற்பட்ட கடைகள், வீடுகள் கட்டி பல வருடங்களாக வசித்து வருகின்றனர். ஆனால் இதற்காக அறநிலையத்துறைக்கு அவர்கள் வாடகை எதுவும் தரவில்லை.இதையடுத்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி வீடு மற்றும் கடைகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியும் யாரும் காலி செய்யவில்லை.
2 பெண்கள் தீக்குளிக்க முயற்சி
இதையடுத்து நேற்று காலை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், மதுரவாயல் தாசில்தார் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அங்கு வந்தனர். வாடகை செலுத்தாத கடைகள், வீடுகளை இடிக்கப் போவதாக கூறினர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது 2 பெண்கள் திடீரென தங்களது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். உடனடியாக இருவரையும் அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த பெண் போலீசார், தடுத்து நிறுத்தி அவர்களது உடலில் தண்ணீரை ஊற்றினர்.
போலீசார் மீது மண்எண்ணெய்
தனது குடும்பத்துடன் மாடியில் நின்றிருந்த பெண் ஒருவர் திடீரென ஆவேசமாகி, கீழே நின்றிருந்த போலீசார் மீது கேனில் இருந்த மண்எண்ணெய்யை ஊற்றி மிரட்டல் விடுத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மண்எண்ணெய் ஊற்றப்பட்ட போலீசார் மீதும் தண்ணீர் ஊற்றப்பட்டது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் வாடகை பாக்கி உள்ள சில கடைகளை மட்டும் பூட்டி ‘சீல்‘ வைத்தனர். மேலும் சிலர் வாடகை பாக்கி செலுத்த தங்களுக்கு கால அவகாசம் கேட்டனர். இதையடுத்து கடைகள், வீடுகளில் வசிப்பவர்கள் வாடகை பாக்கியை உடனே செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஆக்கிரமிப்பு வீடு, கடைகள் இடிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மற்றொரு சம்பவம்
அதேபோல் திருவொற்றியூர் மணலி விரைவு சாலையில் சத்தியமூர்த்தி நகரில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் டீ, மளிகை, அரிசி, எண்ணெய் மற்றும் பால் உள்பட 15-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த வணிக வளாகம் மணலி விரைவு சாலையை ஆக்கிரமித்து அனுமதி இன்றி கட்டப்பட்டதாக கூறி நேற்று காலை சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல உதவி கமிஷனர் பால் தங்கதுரை, செயற்பொறியாளர் பாபு, உதவி செயற்பொறியாளர்கள் மனோஜ், ராஜாராம் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வணிக வளாகத்தில் உள்ள 15-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு ‘சீல்‘ வைத்தனர்.
இதற்கு கடை உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், திருவொற்றியூர் பொது வர்த்தகர் சங்க தலைவர் ராமசாமி, எம்.காமாட்சி ஆகியோர் தலைமையில் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். வணிக வளாகத்துக்கு சீல் வைக்கப்போவது தங்களுக்கு தெரியாது. இதுபற்றி வணிக வளாக உரிமையாளர் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. திடீரென கடைகளுக்கு சீல் வைத்தால் நாங்கள் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும். கடைகளை காலி செய்ய 3 மாதம் அவகாசம் தரவேண்டும் என்றனர். ஆனால் அதற்கு மறுத்த அதிகாரிகள், தொடர்ந்து கடைகளுக்கு சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story