திருவள்ளூர் அருகே புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


திருவள்ளூர் அருகே புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு; பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 24 Sept 2021 5:54 AM IST (Updated: 24 Sept 2021 5:54 AM IST)
t-max-icont-min-icon

திருத்தணி அருகே புதிய டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

புதிய டாஸ்மார்க் கடை
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சிவாடா ஊராட்சி மேட்டு காலனி பகுதியில் புதிய டாஸ்மாக் கடை நேற்று முன்தினம் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த பகுதியில் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பஞ்சாயத்து அலுவலகம் முன்பாக ஒன்று கூடினர். அப்போது அவர்கள், தங்கள் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை திறக்க கூடாது என்று அவர்கள் கோஷம் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் திருவாலங்காடு இன்ஸ்பெக்டர் டெல்லி பாபு மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கிராம மக்கள் சமாதானம் ஆகாததால், சம்பவ இடத்திற்கு திருத்தணி தாசில்தார் ஜெயராணி நேரில் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

கோஷம் எழுப்பினர்
ஆனால் அதிலும் பொதுமக்கள் சமரசம் அடையவில்லை. இந்நிலையில் திருத்தணி எம்.எல்.ஏ., எஸ்.சந்திரன் அந்த பகுதிக்கு சென்று பொதுமக்களிடம் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட மாட்டாது என்று அவர் உறுதியளித்தார்.
மேலும் உங்கள் பகுதிக்கு புதிய ரேஷன் கடை மற்றும் போக்குவரத்து வசதி ஆகியவை செய்து தரப்படும் என்று தெரிவித்தார். இதையடுத்து கிராம மக்கள் அமைதி அடைந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது ஒருபுறமிருக்க அதே பகுதியை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி திறக்கப்பட இருந்த டாஸ்மாக் கடை முன்பு நின்று தங்கள் பகுதியில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கும் வகையில் புதிய டாஸ்மார்க் கடை திறக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.


Next Story