பழனி அருகே அரசு பஸ்-லாரி மோதல்; 3 பேர் பலி
பழனி அருகே அரசு பஸ்சும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
நெய்க்காரப்பட்டி:
பழனி அருகே அரசு பஸ்சும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர். 14 பேர் படுகாயம் அடைந்தனர்.
அரசு பஸ்-லாரி மோதல்
தேனியில் இருந்து பழனி வழியாக கோவைக்கு செல்லும் அரசு பஸ் ஒன்று நேற்று முன்தினம் நள்ளிரவு பழனிக்கு வந்தது. அங்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு அந்த பஸ் கோவை நோக்கி புறப்பட்டது. அந்த பஸ்சில் 40&க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ்சை மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த செல்லப்பாண்டியன் (வயது 40) ஓட்டி சென்றார்.
இதேபோல் பழனியில் இருந்து செங்கல்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கோவைக்கு சென்றது. அங்கு செங்கல்களை இறக்கி வைத்துவிட்டு அந்த லாரி பழனி நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை பழனி பாலசமுத்திரத்தை சேர்ந்த ராஜேஷ் (30) ஓட்டி வந்தார். அந்த லாரியில் 4 கூலித்தொழிலாளர்களும் வந்தனர்.
இந்தநிலையில் பழனி அருகே தாழையூத்து பகுதியில் அரசு பஸ்சும், லாரியும் வந்தபோது, எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் பஸ்சும், லாரியும் சேதமடைந்தது.
3 பேர் பலி
மேலும் இடிபாடுகளில் சிக்கி பஸ்சில் பயணம் செய்த கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சூலேஸ்வரன்பட்டியை சேர்ந்த மாரியப்பன் மகன் மணிகண்டபிரபு (30), விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அடுத்த புளியங்குளத்தை சேர்ந்த திருக்குமரன் மகன் உக்கிரபாண்டியன் (24), தேனி மாவட்டம் ஆலந்தளிர் பகுதியை சேர்ந்த முருகன் (38) ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
மேலும் பஸ்சில் வந்த தேனியை சேர்ந்த தர்மர் (43), முருகன் (50), அய்யன்குமார் (34), சுதாகர் (24), சிங்கம் (57), கருப்பையா (40), சரவணக்குமார் (32), மரியகருப்பையா (48), ஸ்டீபன் (35), ராஜசேகர் (19) ஆகிய 10 பேரும், லாரியில் வந்த தொழிலாளர்களான பழனி பாலசமுத்திரத்தை சேர்ந்த ராஜசேகர் (19), மணிவேல் (21), கருப்புசாமி (60), லாரி டிரைவர் ராஜேஷ் (30) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.
போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பழனி சாமிநாதபுரம் போலீசார் மற்றும் பழனி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது அவர்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அதேபோல் விபத்தில் பலியான 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் மற்றும் பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சத்யராஜ் ஆகியோர் விரைந்து வந்து விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த விபத்து குறித்து சாமிநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story