ரிஷிவந்திய ஒன்றிய அலுவலகத்தை பா ஜ க வினர் முற்றுகை 21 பேர் கைது


ரிஷிவந்திய ஒன்றிய அலுவலகத்தை பா ஜ க வினர் முற்றுகை  21 பேர் கைது
x
தினத்தந்தி 24 Sept 2021 10:37 PM IST (Updated: 24 Sept 2021 10:37 PM IST)
t-max-icont-min-icon

வேட்புமனு தள்ளுபடி செய்ததை கண்டித்து ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பா.ஜ.க.வினர் 21 பேரை போலீசார் கைது செய்தனர்

ரிஷிவந்தியம்

வேட்பு மனுக்கள் தள்ளுபடி

ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வேட்பு மனுக்கள் பரிசீலனையில் மாவட்ட ஊராட்சி 5 வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மொத்தம் 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர். இதில் விண்ணப்ப படிவங்கள் சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை என்று கூறி பா.ஜ.க. வேட்பாளர் குழந்தைவேலு மற்றும் அ.தி.மு.க., பா.ம.க. வேட்பாளர்கள் என மொத்தம் 4 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தி.மு.க., நாம்தமிழர் கட்சி உள்ளிட்ட 3 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 

வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வினர் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததோடு தேர்தல் நடத்தும் அலுவலரின் காரை முற்றுகையிட்டனர். இது தொடர்பாக இரு கட்சிகளையும் சேர்ந்த 19 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் ஒன்றிய அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஒன்றிய அலுவலகம் முற்றுகை

இந்த நிலையில் பா.ஜ.க. வேட்பாளர் குழந்தைவேலுவின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதை கண்டித்து ஒன்றிய தலைவர்கள் சுந்தர், சேகர் ஆகியோர் தலைமையில் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பா.ஜ.க.வினர் திடீரென முற்றுகையிட்டனர். அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும், வேட்புமனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை எழுத்து பூர்வமாக அளிக்க கோரியும் கோஷம் எழுப்பினர்.

இதுபற்றிய தகவல் அறிந்து பகண்டை கூட்டுரோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சபரிமலை தலைமையிலான போலீசார் அங்கு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. ஒன்றிய தலைவர்கள் சுந்தர், சேகர், மாவட்ட துணை செயலாளர்கள் ரவி, ஜோதிநாதன் உள்ளிட்ட 21 பேரை கைது செய்து அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதை கண்டித்து ரிஷிவந்தியம் ஒன்றிய அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்ட சம்பவம் ரிஷிவந்தியத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story